அரைக்கோவணத்தில் அரசியல் கோட்பாடு

-சாம் பிரதீபன்-

 

 

 

 

 

 

 

 

 

 

ஆளுக்கொரு
அரசியல் கோட்பாட்டை
அரைக்கோவணத்தில்
மடித்துக் கட்டிக்கொண்டு
புறப்பட்ட மனிதர்களின்
தொடைகளின் நடுவே
அரிப்பெடுக்கும் வட்டக்கடி!
ஆயுத வன்முறைக்கு
எதிரான அறக் கடி
வார்த்தை வன்முறையை
சொறிந்து தள்ளுகிறது.
கழுத்தில் நஞ்சுகட்டிய
புலி எதிர்ப்பு ஜனநாயகக் கடி
எழுத்து வன்முறையில்
பிராண்டி ஓய்கிறது.
நுரை வருகிறது என்பதால்
சிறுநீர் நதியாவதில்லை
மேலே போகிறது ஆதலால்
புகை முகில் ஆவதில்லை
காட்டில் ஊர்கிற காரணத்தால்
சிற்றெறும்பு சிங்கம் ஆவதில்லை
காற்றில் கலக்கிறது என்பதால்
நாற்றம் நறுமணமாவதில்லை
கூவத் தெரிந்தவர்களே!
நீங்கள்
நிறுத்தாமல் கூவிக்கொண்டேயிருங்கள்
“கூ” அடிப்பவர்கள்
நுரைத்துக்கொண்டே இருக்கட்டும்.