கொழும்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் விமரிசையாக நடந்த ‘நவராத்திரி விழா’: பன்முகத்தன்மை மற்றும் பெண்மையைப் போற்றி முதல்வர் வ்ராய் கெல்லீ பல்தசார் ஆற்றிய சிறப்புரை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு மாநகரசபையின் வருடாந்த ஏற்பாட்டின் கீழ், இவ்வாண்டுக்கான (2026) ‘நவராத்திரி விழா’ 2026 அக்டோபர் 19 மாலை கொழும்பு மாநகரசபைக் கட்டிடத்தில் உள்ள மாநகரசபை உறுப்பினர்கள் கூடத்தில் மிகக் கோலாகலமாகவும் ஆன்மீகச் சிறப்புடனும் நடைபெற்றது.

கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லீ பல்தசார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலாசார விழாவில், மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹுனீப் யூசுப் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் ரோஷனி தாம்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், கௌரவ பிரதி முதல்வர் ஹேமந்த வீரக்கோன், மாநகர ஆணையாளர், பொறியியலாளர் ஏ.எம்.எஸ்.ரோஹண மற்றும் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

நவராத்திரி பூஜைகள், தேவாரப் பாராயணம், சகலகலா வல்லி மாலை மற்றும் மங்கள வாத்திய இன்னிசையுடன் ஆன்மீக வழிபாடுகள் கோலாகலமாகத் தொடங்கின.

சுகாதார நலன்புரித் திணைக்களத்தின் பிரதான மருத்துவ அதிகாரி டாக்டர் கணேஷ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து, விபுலானந்த கல்லூரியின் மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் இசைக்கருவி வாசிப்புடன் தொடர்ந்த இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களும் மாநகர முதல்வரும் சிறப்புரையாற்றினர். அத்துடன் சட்ட அதிகாரி சுதாமத்தியின் பரதநாட்டியக் கலப்பு நடனம் (Bharatanatyam Fusion Dance), மற்றும் முத்துவெல இந்து கல்லூரி, நவகம்புற சங்கத் தமிழ் இந்து மன்றம், விவேகானந்த கல்லூரி, கொழும்பு கலைமகள் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாக்களும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

விழாவில் உரையாற்றிய கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லீ பல்தசார், நகரின் பன்முகத்தன்மை, பெண்களின் பங்களிப்பு மற்றும் சமூகப் பொறுப்புகளை மையமாகக் கொண்டு ஆழமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நவராத்திரி விழா என்பது பெண் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு, பெண்களின் பெருமையை உணர்த்தும் சிறப்புமிக்க நாளாகும் எனக் குறிப்பிட்ட அவர், மாநகர சபையின் பல்வேறு துறைகளில் முக்கியமாக துப்புரவுப் பணிகள், நூலகங்கள், மருத்துவப் பிரிவுகள் உள்ளிட்ட பெரும்பான்மையாகச் சேவை ஆற்றிவரும் பெண் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக மகத்தானது என்றார்.

அவர்கள் தினசரி கடமைகளுக்கு அப்பால், குடும்பப் பொறுப்புகள், முதியோர்களைப் பராமரித்தல் போன்ற பல தனிப்பட்ட வாழ்வியல் சிரமங்கள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியிலும் சளைக்காது பணியாற்றுகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நகர மக்களிடம் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் அமைச்சர்களும், உத்தியோகத்தர்களும், மாநகர சபையும் முழுமையாகச் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல்வேறு பிரச்சினைகளுடன் நாளாந்தம் மாநகரசபையை நாடிவரும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு ஆறுதல் அளிப்பதுடன், சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது நமது கடமையாகும் எனக் கூறிய அவர், துர்க்கை தேவியின் தைரியம், லட்சுமி தேவியின் செல்வம் மற்றும் சரஸ்வதி தேவியின் ஞானம் ஆகிய மூன்று சக்திகளும் மாநகரத்தில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொழும்பு நகரம் என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பர்கர் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து வாழும் ஒரு பன்முகத் தன்மையைக் கொண்ட இடமாகும் எனத் தெரிவித்தார். இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் எவ்வித பேதங்களையும் அனுமதிக்கக் கூடாது என்றும், மத மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதே நம் நகரின் உண்மையான பலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விழாவில் கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக, கௌரவ மாநகரசபை உறுப்பினர் திரு. கே.பி.யோகராஜன் பிள்ளை அவர்களின் நன்றியுரையுடன் இவ்வாண்டுக்கான நவராத்திரி விழா இனிதே நிறைவுபெற்றது. இந்த நவராத்திரி விழா நிகழ்வு, கொழும்பு மாநகர மக்களின் இன, மத ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதோடு, மாநகரசபை ஊழியர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.