நான்காவது நாளாகவும் தொடர்கின்றது விடுதலைக்கான சத்தியாகிரகம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (19) ஆம் திகதி நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இதேவேளை இப்போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் முகமாக நேற்று இரவு முதல் இரவு வேலைகளில் தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அங்கு கூடியிருந்த பிக்குகள் தெரிவித்ததோடு, பிக்குமார்கள் மற்றும் அங்கு சமூகம் தந்திருந்த பொதுமக்களும் சேர்ந்து “தீ பந்தங்களை” கைகளில் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.
இந்தப் போராட்டம் ஒக்டோபர் 16ஆம் திகதி மதியம் பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்கு வந்தடைந்தபோது ஆரம்பிக்கப்பட்டது.
அதே நாள், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.
கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் பூங்காவை விட்டுச் செல்லப் போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 16 ஆம் திகதி, குறித்த குழுவினர் முதலில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒன்றுகூடியதுடன், அதனைத் தொடர்ந்து புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
எனினும், அந்தக் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக பின்னர் அறிவித்தனர்.

