லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான பின் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து…!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்று (அக்டோபர் 20) காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர், மக்கள் ஐக்கிய எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
தான் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, முப்பதாண்டு கால போர் முடிவடைந்து சில மாதங்களே ஆகியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அக்காலகட்டத்தில் நாட்டில் வெளிநாட்டு முதலீட்டுச் சூழல் மிகவும் சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார்.
அந்தச் சூழ்நிலையில் தான், உலகப் புகழ்பெற்ற ஷாங்க்ரி-லா ஹோட்டல் நிர்வாகம் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தது. அக்காலகட்டத்தில் அவர்களுக்கு உலகம் முழுவதும் 105 ஹோட்டல்கள் இருந்தன. இது குறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்தாலோசித்தபோது, நாட்டின் பாதுகாப்புச் சூழல் சீரடைந்துள்ளதை சர்வதேசத்திற்கு சுட்டிக்காட்டி இந்த முதலீட்டை ஊக்கப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியதாக பேராசிரியர் பீரிஸ் கூறினார். இந்த முதலீட்டின் மூலமாகவே நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்து, ‘ITC ரத்னதீப’ போன்ற ஏனைய உலகத்தரம் வாய்ந்த முதலீடுகளும் இலங்கையை நோக்கி வரத் தொடங்கின என்றும், 2010 இல் இருந்த கொழும்பை விட இன்றைய கொழும்பு பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தான் எந்தவிதத் தவறையும் செய்யவில்லை என்றும், வழக்கின் சில விவரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே ஆணைக்குழு தன்னை அழைத்ததாகவும் கூறினார். பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்பதவிகளை வகிக்கும் வாய்ப்புகள் தனக்கு இருந்தும், நமது நாட்டு மாணவர்களுக்குச் சட்டக் கல்வியை வழங்குவதையே தான் தேர்ந்தெடுத்ததாகவும், பணத்திற்காக தான் ஒருபோதும் பின்சென்றதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். விசாகா வித்தியாலயம், ஸ்ரீபாலி வித்தியாலயம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களை உருவாக்கிய பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்றும், நாட்டிற்கு வழங்கினோமே தவிர அரசிடமிருந்து எதையும் பெறவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தன் மீது எந்தத் தவறும் இல்லாததால், தான் கைது செய்யப்படக்கூடும் என்ற எள்ளளவும் பயமோ சந்தேகமோ தனக்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதன்போது, ‘யார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது?’ என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பேராசிரியர், அது பற்றி தனக்குக் கூறப்படவில்லை என்றும், அதைப்பற்றிக் கேட்கும் உரிமை தனக்கு இல்லை என்றும் கூறினார். ஆனால் தனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதையும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதையும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ‘கிரிஷ்’ (Krrish) கட்டிடத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கிரிஷ் பற்றி அவர்களிடம் ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போதைய விசாரணை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், தவறு செய்தவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், அதற்கு தாம் 100% ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அரசியல் நோக்கங்களுக்காக எதிராளிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைக்காக சட்டத்தைப் பயன்படுத்துவதை தாம் எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், சட்டம் சரியான முறையில், சரியான நோக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் வரை தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சில சந்தர்ப்பங்களில் தாம் கருதுவதாகவும் தெரிவித்து தன் உரையை நிறைவு செய்தார்.

