நாட்டிற்கு மூச்சாக விளங்கிய அரச ஊழியர்களை அவர்கள் ஓய்வுபெற்றதன் பின்னர் தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டது போலும்…!. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நமது நாட்டிற்கு அரச சேவை ஊடாக பெரும் சேவைகளை ஆற்றிய ஓய்வூதியச் சமூகத்துக்கு நாம் மதிக்களிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கையிலும் அவர்கள் நாட்டின் மூச்சாகச் செயற்பட்ட போதிலும், நாட்டிற்கு மூச்சாக விளங்கிய அரச சேவையினை இன்று ஓய்வுபெற்ற பின்னர் தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஓய்வுபெற்றோர் ஒன்றிய அமைப்பினர் இன்று (20) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
2020 – 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பிரிவில் ஓய்வுபெற்ற 154,000 க்கும் மேற்பட்ட ஓய்வூதிதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முகங்கொடுத்த முரண்பாடுகளைத் திருத்துவதற்குத் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே இது தொடர்பில் நான் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்து வந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை முன்வைப்பது செவிடர்களின் காதில் சங்கு ஊதுவதைப் போன்றாகிவிட்டது. பலருக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் போது இந்த ஓய்வுபெற்றோர் ஞாபகம் வருகின்றனர். ஆட்சிக்கு வந்தால் மறந்துபோய்விடுகின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும் வேளையில், ஓய்வுபெற்றோர்கள் குறித்தும், அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் உரத்துப் பேசுவோர் ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் அவர்களை மறந்து விடும் நிலை இந்த அரசாங்கத்திலும் தொடர்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்ட இந்த நிவாரணமானது, பாராபட்சமின்றி இந்த அப்பாவி ஓய்வூதியோர் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஓய்வுபெற்றோர்களை கவனிப்பதும், ஆளும் அதிகாரம் கிடைத்ததும் தற்போதைய அரசாங்கத்தைப் போல ஓய்வுபெற்ற சமூகத்தினரை புறக்கணிக்கும் இரட்டை வேடக் கொள்கை ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடையாது. ஓய்வுபெற்றோர்களினது உரிமைகளுக்காகப் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதைப் போலவே, அவர்களுக்காக செய்ய முடியுமான உட்சபட்ச கடமையை நாம் நிறைவேற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஓய்வூதிய சமூகத்தினரைக் கவனிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் நாட்டில் காணப்படுகின்றது என அரசாங்கத்தின் அமைச்சர்களே தெரிவிக்கின்றனர். திறைசேரியில் பணம் நிரம்பிக் கிடக்கும் நிலையில் இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுகின்றது என்ற பிரச்சினை எழுகின்றது. தற்போதைய அரசாங்கம் இந்த நிவாரணங்களை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்காவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த முரண்பாடுகளை தீர்த்து வைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.



