அரசியல் லாபங்களுக்காக தேசிய பாதுகாப்பை பகடைக்காயாக்குகின்றனர்: நிருக்ஷ குமார் சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அரசியல் லாபங்களை நோக்கமாகக் கொண்டு தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, இது குறித்து முறையான விசாரணைகளை பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் முன்னெடுக்க வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார வலியுறுத்தியுள்ளார்.
இன்று (20) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அவர், பாதயாத்திரைகள் மற்றும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலர் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டு, இத்தகைய அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம் உடனடியாக வாக்கு மூலங்களைப் பெற்று முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஞானசார தேரரின் விடுவிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, பிழைப்புவாத அரசியல் செய்யும் சில துறவிகள் விகாரைகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவித்த நிருக்ஷ குமார, இவர்கள் உண்மையாகவே நிம்மதியாக வாழ விரும்பினால் விகாரைகளில் இருந்துகொண்டு அரசியல் செய்வதையும், பொய்ப் பிரசாரக் கட்சிகளிடம் அடைக்கலம் தேடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
இத்தகைய துறவிகளின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கும் மிகப்பெரிய அவப்பெயரும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
அத்துடன், சட்டத்திற்கு அப்பாற்பட்டு யாரும் செயற்பட முடியாது எனத் தற்போதைய ஜனாதிபதி மிகத் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், தற்போதைய ஆட்சியாளர்களும் அமைச்சரவையில் உள்ள சிலரும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை மாற்றுவதற்காக ஜனாபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தங்களுக்குச் சாதகமான தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சட்டங்களை மாற்ற முற்படும் இத்தகைய தவறான முன்னுதாரணங்களுக்கு எதிராக நாட்டின் இளைய தலைமுறையினரும் ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், கடந்த காலங்களில் படுகொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது பதுங்குமிடங்களைத் தேடிச் செல்வதையோ, அரசியல் தஞ்சம் கோருவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி தொடர வேண்டும் என்றும், மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.

