அகதிகள் விவகாரம்: நெதர்லாந்தில் கூட்டணி அரசு கவிழ்ந்தது!

படம் :பிரதமர் மார்க் ருட்டே(Mark Rutte)

Kumarathasan Karthigesu-பாரிஸ்

விரைவில் புதிய தேர்தல்
புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் உள்வாங்கும் கொள்கை தொடர்பாகக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெதர்லாந்தின் அரசு கவிழ்ந்தது. பிரதமர் மார்க் ருட்டேயின் (Mark Rutte) நான்காவது அமைச்சரவை கலைக்கப்படுகிறது. புதிய அரசைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் இலையுதிர்காலப் பகுதியில் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
போரினால் அகதிகளாகி வந்தவர்களது உறவினர்களை உள்ளெடுக்கும் விவகாரமே ஆட்சி கவிழும் அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மார்க் ருட்டேயின் கூட்டணி அரசு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. நாட்டுக்குள் வெளிநாட்டு அகதிகளை உள்வாங்கும் கொள்கை தொடர்பாக அவரது கூட்டணிக் கட்சிகளிடையே அடிக்கடி முரண்பாடுகள் தோன்றி வந்தன.
கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பழமைவாத விவிடி( VVD) கட்சி, அகதிகள் நாட்டுக்குள் கட்டுப்பாடின்றிப் படையெடுத்து வருவதை வரையறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. போரினால் அகதிகளாகி நெதர்லாந்து வந்தவர்களது நெருங்கிய உறவினர்களை நாட்டுக்குள் உள்வாங்கும் எண்ணிக்கையை மாதம் ஒன்றுக்கு இருநூறாக வரையறை செய்கின்ற திட்டம் ஒன்றைப் பிரதமர் மார்க் ருட்டே கடந்த வாரம் அறிவித்திருந்தார். குடும்ப முறைமைக்கு ஆதரவான மற்றொரு கூட்டணிக் கட்சியாகிய கிறிஸ்ரியன் யூனியன் (Christian Union) சமூக லிபரல் கட்சி அந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
நெதர்லாந்தில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் மார்க் ருட்டேயின் தற்போதைய கூட்டணி அரசு கடந்த ஆண்டுதான் பதவியேற்றிருந்தது.2010 முதல் ஆட்சியில் தொடர்கின்ற 56 வயதான ருட்டேயின் தலைமையில் அமைந்த நான்காவது கூட்டணி அரசு இதுவாகும். ருட்டே தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டவரது குடியேற்றம் தொடர்பாகத் தீவிர வலதுசாரிகளது கடும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வந்தார்.