இந்திய பயணம் ரத்து : சீனாவிற்கு பறந்த எலன் மஸ்க்.

தொழிலதிபரும் டெஸ்லா தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் இந்தியா வரவிருந்த நிலையில் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.டெஸ்லா பணிகள் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ளதாகவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்திய பயணத்தை இரத்து செய்து விட்டு தற்போது சீனாவுக்கு முக்கிய விஜயம் ஒன்றை தொழிலதிபர் எலான்மஸ்க் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. டெஸ்லா நிறுவனத்தில் புதிய படைப்பான சாரதி இல்லாத செல்ஃப் டிரைவிங் கார் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், செல்ஃப் ட்ரைவிங் சொப்ட்வெயார் குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதனடிப்படையில் செல்ஃப் ட்ரைவிங் தரவுகளை சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளுக்கு எடுத்துவர அனுமதி பெறுவது மற்றும் சீன உயர் அதிகாரிளிடமும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுக்கான விஜயத்தில் பல முக்கிய திட்டங்களை கொண்டுள்ள மஸ்க்,  பெய்ஜிங்கில் சீன பிரீமியர் லீ கியாங்கைச் சந்தித்ததாகச் சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்லாவின் முக்கிய தொழிற்சாலைகள் அனைத்தும் அமெரிக்காவில் இயங்கிவரும் நிலையில் முதல் முறையாக சீனாவின் ஷங்காயில் ஒரு தொழிற்சாலையை அமைக்க டெஸ்லா கடந்த 2018இல் சீனாவுடன் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து ஷாங்காயில் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. டெஸ்லாவின் மிக முக்கிய மார்கெட்களில் ஒன்றாகச் சீனா இருப்பதால் அங்கு டெஸ்லா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.