ஒன்றிணையப்போகும் சந்திரிக்கா, மஹிந்த, ரணில் : அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிரணி அரசியல் தரப்பினர் ஒன்றிணையலாம் என ஜேவிபியின் அரசியல் கூட்டணி என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா, மஹிந்த, ரணில் உள்ளிட்ட அனைத்து எதிர் அணிகளும் ஒரே மேடையில் இணையவுள்ளனர். அவர்கள் ஏற்கனவே திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகள் ஒரு தடையாக இருக்கும்.அதனால் அவர்கள் ஒன்றினைவது சாத்தியமில்லை’ எனவும் மற்றுமொரு தகவலை வெளியிட்டார். அண்மையில் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பை ஏற்று அனுர இந்தியாவிற்கு பயணமானதையடுத்து இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் கனடாவிற்கும் பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்புகளை அனுர நடாத்தியிருந்தார். இந்நிலை தற்போது சுவீடனிலும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் அனுரவுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அச்சமடைந்திருக்கக் கூடும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் அனுரவுக்கான மக்கள் ஆதரவு 40 வீதமாக உயர்வடைந்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.மேலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் அனுரகுமார திஸாநாயக்க எதிர்கட்சித் தலைவராவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.