உக்ரைனுக்கு அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிளஸ்டர் குண்டுகள்!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

தடைகளை மீறி வழங்க பைடன் நிர்வாகம் முடிவு?

மிகப் பரந்த பிரதேசத்தில் அழிவுகளை ஏற்படுத்தவல்ல கிளஸ்டர் ரக வெடி குண்டுகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. வான் வழியாகவும் தரை மற்றும் கடலில் இருந்தும் ஏவக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உதைபந்தாட்ட மைதானம் ஒன்றின் பரப்பைப் போன்று பல மடங்கு விஸ்தீரணமான பிரதேசத்தில் கண்மூடித் தனமான பேரழிவுகளை ஏற்படுத்தவல்லவை.போரில் ஈடுபடாத தரப்புகளையும் பெருமளவில் அவை காவுகொள்கின்றன.

ரஷ்யப் படைகள் மீது பெருமெடுப்பில் எதிர்த்தாக்குதலைத் தொடக்கியுள்ள உக்ரைன் பெருமளவு வெடிமருந்து உதவிகளை அமெரிக்காவிடம் கோரி வருகிறது. அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவிருக்கின்ற அடுத்த கட்ட ஆயுத தளபாட உதவிகளில் -சுமார் நூறு நாடுகளில் தடை விதிக்கப்பட்ட –கிளஸ்டர் குண்டுகளும் (cluster bombs) அடங்கியுள்ளன என்று வோஷிங்டனில் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

வாரக் கணக்காக நீடிக்கின்ற எதிர்த் தாக்குதல்களில் உக்ரைன் படைகள் குறிப்பிடக் கூடிய வெற்றிகளைப் பெறமுடியாமல் தடுமாறிவருகின்றன.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வெடி குண்டுகளை விநியோகிப்பதை அனுமதிப்பதற்கு பைடன் நிர்வாகம் தயாராகி வருகின்றது என்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

அமெரிக்காவின் புதிய ஆயுத தளபாட உதவிகள் பெரும்பாலும் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 155 மில்லி மீற்றர் ஹொவிட்சர் பீரங்கிகளால் (155mm howitzers) ஏவக்கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்ளடங்கும் என்று பென்டகன் வட்டாரங்கள் கூறுகின்றன. தாய்க் குண்டுகள் ஒவ்வொன்றும் வெடிக்கும் போது அவற்றில் இருந்து கிளம்பித் தனித்தனியாகக் வெடிக்கத் தக்க 88 சிறிய குண்டுகளைக் (88 bomblets) கொண்டிருக்கும். சிறிய குண்டுகள் ஒவ்வொன்றும் பத்து சதுர மீற்றர்கள் (square meters) பரப்பில் சேத வரம்பைக் கொண்டவை. மொத்தம் 30 ஆயிரம் சதுர மீற்றர் பிரதேசத்தில் பரவி வெடித்துச் சிதறி எதிர்ப்பட்டவற்றை எல்லாம் அழிக்க வல்லவை என்று சிஎன்என் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர்க் களத்தில் ரஷ்யா ஏற்கனவே கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் தயாரிப்பாகிய கிளஸ்டர் ரகக் குண்டுகளை உக்ரைன் படைகளும் ஏவி வருகின்றன. இந்த ரக குண்டுகளை கிளஸ்டர் உடன்படிக்கையை(Convention on Cluster Munitions – CCM) ஏற்றுக் கொண்ட 123 நாடுகள் தடை செய்திருக்கின்றன. உக்ரைன், ரஷ்யா உட்பட 71 நாடுகள் இந்த உடன்பாட்டில் இணையவில்லை.

உலகில் இன்னமும் துரோகத்தனமான கொடிய ஆயுதங்களில் ஒன்றாகக் கிளஸ்டர் குண்டுகள் விளங்குகின்றன.

அவை மிகப் பரந்த பிரதேசத்தில் கண்மூடித்தனமாக உயிர்களைக் கொன்றும் ஊனப்படுத்தியும் பரந்த அளவில் மனிதத் துயரத்தை ஏற்படுத்துகின்றன – என்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்துவருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வியட்நாம் உட்பட பல போர்க் களங்களில் பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் வெடிக்காத நிலையில் இன்றைக்கும் மீட்கப்பட்டு வருகின்றன. வீசப்படுகின்ற குண்டுகளில் பத்து முதல் 40 சதவீதமானவை வெடிக்காமல் புதையுண்டு போகின்றன என்று செஞ்சிலுவைக் குழு மதிப்பிட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">