வாணவெடி மற்றும் ஏவும் கருவிகளைத் தேடப் பொலீஸாருக்கு அரசு உத்தரவு!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பெல்ஜியத்தில் இருந்து கடத்திவந்தோர் சிக்கினர்.

வாணவெடிகள்(fireworks) மற்றும் அவற்றை ஏவப் பயன்படுத்துகின்ற மோட்டார்களை (fireworks mortars) மறைவிடங்களில் இருந்து தேடிக் கைப்பற்றுமாறு உள்துறை அமைச்சு பொலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரதான வீதிகள், குடியிருப்புகள், பொது இடங்கள், கடைகள் என்பவற்றில் திடீர்ச்சோதனைகளை நடத்தி வாண வெடிப் பொருள்களைக் கைப்பற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

“இந்த வெடிப் பொருள்கள் பொது மக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் அவற்றை இயக்குபவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே அவற்றின் பாவனை, விநியோகம், விற்பனை என்பவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மிக இறுக்கமாக முன்னெடுங்கள்” – என்று உள்துறை அமைச்சு சகல பொலீஸ் தலைமையகங்களுக்கும் அனுப்பிய செய்தியில் தெரிவித்திருக்கிறது.

நாட்டின் சுதந்திர தினம் நெருங்குவதால் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற பல நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சுதந்திர நாளுக்கு முன்னராக வன்செயல்களை மீண்டும் ஆரம்பிக்க வன்முறைக் குழுக்கள் முயற்சிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு  அரச மட்டத்தில் காணப்படுகிறது.

அண்மையில் நாட்டில் கலவரங்கள் இடம்பெற்ற சமயத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகப் பெருமளவு வாண வெடிகள், வெடி மருந்துகள், ஏவு கருவிகள் என்பன பெல்ஜியத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் பொலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. அங்கும் பிரான்ஸின் எல்லைக்குள்ளும் வெடிப் பொருள்களைக் கடத்திவந்த சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

சமீப நாட்களில் நாடெங்கும் 68 ஆயிரம் வாண வெடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 500 கிலோ கிராம் எடைகொண்ட வெடிப் பொருள்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன – என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா தெரிவித்திருக்கிறார்.

கொண்டாட்டங்கள் மற்றும் முக்கிய வைபவங்களின் போது கண்கவர் காட்சிக்குப் பயன்படுத்தப்படுகின்ற வாண வெடிகள் பிரான்ஸில் அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கின்றன.

பொலீஸார் மீதும் பொலீஸ் நிலையங்கள் மீதும் வாண வெடிகளை ஏவுகணைகள் போன்று பொழிந்து தள்ளித் தாக்குவது ஒரு புதிய தாக்குதல் பாணியாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதையும் உலுக்கிய பெரும் வன்முறைக் கலவரங்களின் போதும் வாண வெடிகளே கலகக்காரர்களால் பிரதான தாக்குதல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன . பாரிஸ் புறநகரங்களிலும் நாட்டின் ஏனைய நகரங்களிலும் இரவிரவாக நீடித்த தெருக் கலவரங்களின்போது பொலீஸாரும் ஜொந்தாமினரும் மிகப் பலமான வாண வெடித் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

வாண வெடிகள் காரணமாகப் பல இடங்களில் பெரும் தீப்பரவல்களும் ஏற்பட்டிருந்தன.