தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய காட்சிகள்  தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.  சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக; கூட்டத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தல், அரசுடனான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சு உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கும், ஏனைய பங்காளிகள், தனிவழி செல்வதற்கும் இணக்கம் எட்டப்பட்டதாக  சுமந்திரன் தெரிவித்தார்.

சிலவேளை புளொட், ரெலோ என்பன இணைந்து போட்டியிடக்கூடும் அல்லது தனித்தனியே போட்டியிடக்கூடும். அது தொடர்பில் அந்த இரு கட்சியினரும் தீர்மானம் எடுப்பார்கள். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எவரும் போட்டியிடுவதில்லை. ஆனால், தேர்தல் முடிவடைந்த பின்னர் மூன்று பங்காளிக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு சபைகளில் ஆட்சி அமைப்போம்   எனவும்  சுமந்திரன்  மேலும் தெரிவித்தார்.