கோட்டா,மஹிந்த, மற்றும் சுனில் ரத்நாயக்க கனடாவிற்குள் பிரவேசிக்க தடை!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்பதோடு அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள்  தொடர்ந்து தண்டனையில் இருந்து தப்பிப்பதை கனடா ஒருபோதும் ஏற்காது என்ற செய்தியை இந்தத் தடைகள் எடுத்து காட்டுவதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் முன்னேற்றத்தையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ள தனிநபர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு மிருசுவிலில் எட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருந்தார்.

மேலும் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.