விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு சிறப்புரிமை

இலங்கையில் எதிர்வரும் தேர்தல்களில் விசேட தேவையுடையவர்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவது உள்ளிட்ட சில விசேட திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில்  விசேட தேவையுடையவர்கள் குறித்து அரச திணைக்களங்களும் கவனக்குறைவாகவே செயற்படுகின்றன. தேர்தலின்போது அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை.  விசேட தேவையுடைய  16 இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பில் இரண்டு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்கென விசேட அடையாள அட்டை ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளோம். இதன் ஊடாக அவர்கள் சிக்கல்கள் இன்றி வாக்களிக்க முடியும். அது மாத்திரம் போதுமானதல்ல. வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதவர்கள் இருக்கின்றார்கள். பார்வையற்ற வாக்காளர்களில ப்ரெயில் முறைமையை 20 வீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கென விசேட வாக்குக் சீட்டை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதனைவிட நடமாடும் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இவ்வாறான நடைமுறைகள் ஊடாக விசேட தேவையுடையவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.  என்றார்.

இலங்கையில் அடுத்து நடைபெறப்போவது எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதில் இந்த விடயங்களை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.