போராட்டம் ஓயவில்லை, ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டும் நோக்கிலும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புமாறும் வலியுறுத்தும் கோட்டா கோ கம போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை என கொழும்பில் அமைந்துள்ள சமூகம் மற்றும் சமாதான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி எதிர்வரும் இரண்டு வருடங்களை எப்படியாவது கடத்திவிடலாம் என எண்ணக்கூடாது எனவும் அரசியல் அமைப்பில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு தமக்கான தலைவனை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஜனாதிபதிக்கு இந்த பதிவியில் இருப்பதற்கான ஒரேயொரு வாய்ப்பாக, அவர் அரசியல் அமைப்புச் சபையின் ஊடாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் எதிர்வரும் இரண்டு வருடத்தை இப்படியே கடத்திச் செல்ல முயல்வார் எனின் இது இந்த நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்க முடியாது. இந்த நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றியமைத்து, புதிய சட்டங்களை உருவாக்கிய இந்த நாட்டை முன்னேற்ற முடியும். மக்களின் இறையாண்மைக்கு தலைசாய்த்து மக்கள் தலைவர்களை நியமித்துக்கொள்வதற்கு வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆகவே இந்த போராட்டம் நிறைவுக்கு வரவில்லை, புதிய கோணத்தில், புதிய பரிமாணத்தில் நாட்டின் நலன் கருதி செயற்படும் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்கப்படும். இதில் இணைந்துகொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். வியூகத்தை மாற்றி இந்த நாட்டு மக்களை ஒன்றிணைப்போம்.

இந்த வாய்ப்பு விசேடமானது. நாட்டை புதிதாக கட்டியெழுத்த, தலைகளை மாற்றியமைக்க, சிந்தனையை மாற்றியமைக்க இதுவே வாய்ப்பு. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்வோம் என அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். நியாயமான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளை பிடித்துக்கொண்டுச் செல்லாமல், இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றவர்களை தேடிச் சென்று, அவர்கள் கொள்ளையடித்ததை மீண்டும் இந்த நாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணியை முன்னெடுக்க உதவுங்கள். இதுவே இந்த சந்தரப்பத்தில் செய்ய வேண்டிய மிகமுக்கியமான விடயம். அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் இணையுங்கள். இது உங்களுடையதும், என்னுடையதும். இணைந்து செயற்படுவோம். என்றார்

நாட்டின் நன்மைக்காகவும், நல்லதொரு எதிர்காலத்திற்காகவும் புதிதாக சிந்திக்கக்கூடிய அனைவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறும் சமூகம் மற்றும் சமாதான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.