நாடகப் பட்டறையில் பழுத்த நடிகையாக தோன்றிய தேவதை நிஜத்தில் வந்தால் என்ன என்ற நினைப்பு அப்பப்ப வந்து ஈழ தேசத்தை இழுத்து நிறுத்தியது.

- ரேணுகா உதயகுமார் -

தாயக மண்ணில் ஊற்றெடுத்த நாடகப் பேரூற்று இசை வசமாகி பல்லாயிரக் கணக்கான மைல்கள் தாண்டி பிரித்தானியாவில் தடம் பதித்து கோலோச்சுவதென்பது அசாத்தியமான வெற்றியின் உச்சம் என்றே சொல்லலாம். சாம் என்கிற பெரும் ஒற்றைக் கலையாளுமை அதற்கு சற்றும் குறையாத கலைமாதேவி றஜித்தா சாமின் இணை ஆளுமை அன்றைய நாடக அரங்கின் உச்சமாய் ஒளிர்ந்தது. தமிழ் நாடகத்தையே விழாவாக்கி ஒரு தியேட்டரில் கொண்டாடித் தீர்த்த ஒரு நாள் அன்று. புலம்பெயர்ந்தோம் பிரிந்தோம் புலம்புகின்றோம் என்பதை எல்லாம் கடந்து நாடகத் துறையில் அவர்கள் தங்களுக்கான பணியை மிகக் காத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டின்(ஈழம்) அகமாய் பிரதிபலிக்கின்ற நாட(டு)க(அ)ம் மெய் என்கிற உடலும் வெளி என்கிற காற்றுமாய் உடல் அசைவியக்கத்தால் கதை சொல்லி அரங்கையே அரக்க விடாமல் கட்டிவைத்த பெருமை அவர்களுக்கேயானது.

இதில் வியந்து பார்த்த விடயம் என்னவென்றால் மூன்று தலைமுறைக் கலைஞர்களை பயிற்றுவித்து அரங்கேற்றுதல் என்பது இந்த நாட்டைப் பொறுத்தவரை அசாத்தியமான கடினமான காரியம். அதிலும் பல்லினக் கலாசாரங்களொடு வளரும் குழந்தைகள் இதில் விருப்போடு நடித்திருந்தார்கள் என்பது பெரும் வெற்றிதான். ரசிகர்களின் கைதட்டல்களும் ஆரவாரங்களும் முழக்கங்களும் அவர்களுக்கக் கிடைத்திருந்த பெரும் அங்கீகாரமாகவே பார்க்க முடிந்தது. அதை விட சொன்ன நேரத்துக்கு விழாவைத் தொடங்கியது என்பது இங்கு எந்த நிகழ்வுகளிலும் காணப்படாத ஒன்றாகவே பார்க்கிறேன் நான்.
பெண்கள் தான் ஆண்களையே விடுதலை செய்தோம். ஆனால் அந்த ஆண்களே பெண்களுக்கு வேலியிடுவதை மௌனச் சத்தம் ஓலமிட்டது. ஒவ்வொருவர் மனதிலும் அன்று அலையடித்து ஓய்ந்திருந்தது. பாரதி பாட்டிலே காட்டியதை, தலைவன் காட்டிலே உருவாக்கிக் காட்டிய புதுமைப் பெண்ணை பாரதியாய் வாக்குவாதத்தால் தூக்கு மேடையேற்றிய விதம் அற்புதம்.
எங்களின் நடகர் ஊடகர் ஏடகர் என பன்முக ஆளுமையான ஏ.சி.தாசீசியஸ் மாஸ்ரரை அழகுபடுத்தி அரங்க நாயகனாக்கி அமரவைத்ததும் குரு சிஷ்யனாய் அவரைக் கொண்டாடி நித்தி மாஸ்ரர் பேசியதும் அன்ரன் பொன்ராசா கலைத் திமிருடன் அவரருகில் அமர்ந்திருந்ததும் “கண்ணுளர் கோன்” என பெருமைப்படுத்தி மாண்பேற்றப்பட்டு உயர்த்திப் பார்த்ததும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய தருணம். அவை பாராட்டுக்குரியன. மிக நீண்ட காலமாக நாடகத் துறையில் இயங்கிவருகின்ற இரு ஜாம்பவான்கள் தமிழீழ விடுதலையோடு உருவாக்கப்பட்ட தகமைசார் கலைஞர்களாக வந்திருந்தது அந்த மேடைக்கும் கலைக்கும் பெருமை சேர்த்து இனிவரும் கலைஞர்களுக்கு பெரும் வழிகாட்டியாகப் பார்த்தது பெரும் பாக்கியமாக அவவரங்கு கண்டுகொண்டது மறுக்க முடியாத உண்மையாகும். அரங்குக்கு முன்னே கடலெனத் திரண்ட மக்கள் அலையலையாக இருக்கைகள் நிரம்பி வழிய நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
எந்தவொரு நிகழ்விலும் காணாத பல நேர்த்தியான விடயங்களை அங்கு பார்த்தேன். தயார்ப்படுத்தல் ஒப்பனை பாத்திரங்களின் உயிரோட்டம் கதை வசனம் நெறிப்படுத்தல் ஒலி ஒளி தெளிவு நடிப்பு உடல்மொழி என்பவை மிக மிக நேர்த்தியாக அமைந்திருந்தன. வெறுமனே நாடகத்துக்கப்பால் தங்களோடு பொருத்திப்பார்ப்பதை அவதானிக்க முடிந்தது.
மார்ச் 1 இல் மறக்க முடியாத மகிழ்வுப்பொழுதாக மாறித்தான் போயிருந்தது அன்று. மந்திரக் கோலால் மாயங்கள் செய்த எங்கள் தேவதையின் நடிப்பு அபாரமானது. நாடகப் பட்டறையில் பழுத்த நடிகையாக தோன்றிய தேவதை நிஜத்தில் வந்தால் என்ன என்ற நினைப்பு அப்பப்ப வந்து ஈழ தேசத்தை இழுத்து நிறுத்தியது.
நடிப்புக்கொன்றே பிறப்பிக்கப்பட்ட சாம் பிரதீபன் எங்கட சனங்களின் எல்லாவற்றையும் மிகத் தத்துரூபமாக மொழி வளத்தோடு உடல் மொழியோடு வெளிக்கொண்டுவந்த விதம் அரங்கைக் கட்டிப்போட்டுவிட்டது. பெரும் ஆளுமைகளுக்காக அமைக்கப்பட்ட மேடையாய் அவ்வரங்கு இருந்தது மட்டுமன்றி அளையவர்களை உள்வாங்கியது பெரியதொரு அதிசயமாயப் பார்க்கப்பட்டது.
தமிழர் நாடக விழாவில் நாலெழுத்து மந்திரம் சொல்லி மௌனச் சத்தத்துக்குள் விழுந்து எங்கட சனங்களின் கதை சொல்லி கனவுத் தேசமாய் நிலமிழந்த நிம்மதியின் கதை சொன்ன இந்த நாடகப் பேரரங்கு மெய்வெளியின் பெரும் வெற்றி என்பதை அரங்கே கட்டியம் சொல்லி நின்றது.