இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் கேத் ஆய்வகங்களின் (Cath Labs) எண்ணிக்கை 26 ஆக அதிகரிக்கப்படும் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் இதய நோய் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள இருதய கேத் ஆய்வகங்களின் (Cardiac Catheterization Units / Cath Labs) எண்ணிக்கையை 26 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், தற்போது நாடு முழுவதும் 10 கேத் ஆய்வகங்கள் மட்டுமே செயலில் உள்ள நிலையில், இந்த ஆண்டுக்குள் மேலும் 16 புதிய ஆய்வகங்கள் இந்த அமைப்பில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 3,103 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதுடன், இதற்கான நிதி தேசிய திறைசேரி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் சலுகைக் கடன்களின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய மூன்று முக்கிய தேசிய மருத்துவமனைகளுக்குக் கூடுதலாக, மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, இரத்தினபுரி, அனுராதபுரம், குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளுக்கும் இந்த புதிய கேத் ஆய்வக வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஒரே வாரத்திற்குள் மட்டும் புதிதாக 4 கேத் ஆய்வகங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இத்தகைய புதிய கேத் ஆய்வகம் ஒன்று அமைச்சரால் நேரில் சென்று திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த இரு நாட்களில் தேசிய மருத்துவமனையில் மேலும் இரண்டு ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
இதய நோயாளிகள் தங்களுக்குரிய சிகிச்சையைப் பெறுவதற்காக 7 முதல் 9 மாதங்கள் வரை நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது காணப்படுவதால், இந்த நீண்ட காத்திருப்புப் பட்டியலைக் (Waiting List) குறைப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
ரூபாய் 275 மில்லியன் முதல் 350 மில்லியன் வரை அதிக செலவு மிக்க அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு இந்த ஆய்வகங்கள் அமைக்கப்படுவதனால், இந்த நவீன உபகரணங்களை முழுத் திறனுடன் பயன்படுத்தி, பகல் நேரங்களில் மட்டுமன்றி இரவு நேரங்களிலும் தடையின்றி நோயாளிகளுக்குச் சிறந்த சேவைகளை வழங்குமாறு மருத்துவ அதிகாரிகளிடம் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்

