ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்: மூன்று சட்டத்தரணிகளையும் உடனடியாகக் கைது செய்து விசாரிக்க கோரிக்கை!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ என்பவரை விடுவிப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து பெருந்தொகை பணத்தை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சட்டத்தரணிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘புரவெசியா’ அமைப்பின் அழைப்பாளர் ரவீந்திர நிஷங்கவினால் இன்று (30) நண்பகல் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டதுடன், அதனையடுத்து அவர் ஊடகங்களுக்கும் விசேட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, திஸ்ஸ வேரகொட, புலஸ்தி ரூபசிங்க மற்றும் சஞ்சய ஆரியதாஸ ஆகிய மூன்று சட்டத்தரணிகளுக்கே எதிராக இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சட்டத்தரணிகளும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி துபாய் நாட்டுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆகஸ்ட் 15 முதல் 18ஆம் திகதி வரை ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து ஹரக் கட்டாவின் மனைவியைச் சந்தித்து, இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாகப் பெருந்தொகை பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ரவீந்திர நிஷங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இவர்களின் துபாய் பயணத்திற்கான விமான பயணச்சீட்டுக் கட்டணங்கள் மற்றும் அங்குள்ள ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணங்கள் அனைத்தையும் ஹரக் கட்டாவின் மனைவியே முழுமையாகச் செலுத்தியுள்ளார் என்றும், தம்மால் முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டை அந்த சட்டத்தரணிகளால் ஒருபோதும் மறுக்க முடியாது என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
அவர்கள் துபாய் சென்றதற்கான விமான சீட்டுகள் மற்றும் தங்கியிருந்த ஹோட்டல் விபரங்கள் போன்ற உறுதியான ஆதாரங்கள் மூலம் இதனை நிரூபிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்த வேண்டுமாயின், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய திஸ்ஸ வேரகொட, புலஸ்தி ரூபசிங்க மற்றும் சஞ்சய ஆரியதாஸ ஆகிய மூன்று சட்டத்தரணிகளையும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்து முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என ரவீந்திர நிஷங்க வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு கைது செய்து விசாரிப்பதன் மூலமே, இந்தச் சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது, யாருக்காக இந்த லஞ்சப் பணம் கேட்கப்பட்டது மற்றும் எவ்வளவு பணம் பெறப்பட்டது போன்ற அனைத்து உண்மைகளையும் நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


