தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில் கர்தினால் தயக்கம்: சிறிதரன் எம்பி குற்றச்சாட்டு
Meiveli Media Team

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் கர்தினாலும், கத்தோலிக்க சபையும், தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்பதை வெளிப்படையாகக் கூறுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், கடந்த மே 18ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாகவும், அது தொடர்ந்தும் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார் என சிறீதரன் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கு சில கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசப் கூட இனவழிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்த போதிலும், அதற்கான நீதியை கோருவதில் கத்தோலிக்க சபை முன்வரவில்லை எனவும் சிறீதரன் தெரிவித்தார். அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் முன்வைத்த கருத்துக்களை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

