மஹர சிறைச்சாலையில் திடீர் மோதல் மற்றும் பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் தப்பிச் செல்லும் முயற்சி காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளையில், மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் மஹர சிறைச்சாலையிலுள்ள இரு வேறு கைதிகள் குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது.

இந்த மோதலுக்கான முதன்மை காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படாத நிலையில், நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

சிறைச்சாலையின் சுமார் 15 அடி உயரமான தகரத் தடுப்பை உடைத்துக்கொண்டு கைதிகள் குழுவொன்று வெளியே தப்பிச் செல்ல முயற்சித்துள்ளது.

இந்தத் தப்பிச் செல்லும் முயற்சியே அங்கு நிலமை கையை மீறிச் செல்ல முக்கிய காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோதல் மற்றும் தப்பிச் செல்லும் முயற்சி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிறை வளாகத்திற்குள் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் மற்றும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

அத்துடன் சிறைப் பகுதிக்குள் தீப் பரவல்களும் பதிவாகியுள்ளன. சிறைக்குள் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்த கைதிகளின் உறவினர்கள் சிறை வளாகத்தின் முன் பெருந்திரளாகக் கூடத் தொடங்கியுள்ளனர்.
“எங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை, அங்கிருந்து எழும் சத்தங்கள் மட்டுமே எங்களுக்குக் கேட்கிறது” என சிறை வளாகத்திற்கு வெளியே காத்திருந்த கைதியின் உறவினர் ஒருவர் கதறியபடி ஊடகங்களிடம் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த அசம்பாவிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் சிறைத்துறை அதிகாரிகளுடன், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளின் உறவினர்கள் கூடி வருவதால் சிறை வளாகத்தைச் சுற்றிலும் பெரும் அமைதியற்ற நிலை காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்படுத்த சிறைத்துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.