இலங்கையில் 2026 ICT சட்ட மாநாடு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் கோலாகலம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்ட மன்றம் ஏற்பாடு செய்த 2026 ஆம் ஆண்டிற்கான ICT சட்ட மாநாடு கொழும்பு ‘சினமன் லைஃப்’ ஹோட்டலில் சிறப்பாக இன்றைய தினம் நடைபெற்றது.

“சைபர் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி: நெகிழ்ச்சியான டிஜிட்டல் ஆளுகையை கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு அமைந்திருந்தது.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்ட மன்றத்தின் தலைவர் கலாநிதி சுனில் அபேரத்னவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், பிரதம நீதியரசர் பிரீதிபத்மன் சூரசேன, நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹந்த அபேசூரிய, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் தனபால ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இம்மாநாட்டின் பிரதான உரையை லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் வணிகச் சட்ட ஆய்வுகளுக்கான மையத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் சட்டப் பேராசிரியர் இயன் வால்டன் ஆற்றினார்.

மேலும், இந்நிகழ்வின் போது “இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சட்டச் சஞ்சிகை” (SLJICTL) அதிகாரப்பூர்வமாக வெளியீடும் செய்துவைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார, நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும், இது சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, நீதிமன்றங்களில் காணப்படும் வழக்குத் தாமதங்களைக் குறைப்பதற்கும் நீதிமன்ற அமைப்பில் நவீன மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை களுக்கிடையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.