ஈழத் தமிழ் போராட்ட கால வரலாற்றுச் சுழற்சியோடு ஓயாத இயங்கம் கொண்ட பெரும்சக்தி மாமனிதர் கவிஞர் நாவண்ணன்

ஈழத் தமிழ் போராட்ட கால வரலாற்றுச் சுழற்சியோடு ஓயாத இயங்கம் கொண்டவராக பேனா முனையோடு தன் பெரும்சக்தியை வெளிப்படுத்திய படைப்பாளியாக அறியப்பட்ட மாமனிதர் கவிஞர் நாவண்ணனின் ‘ வலிகாமம் இருந்து வன்னி வரை என்ற நூல், 18.04.2026 சனிக்கிழமை லண்டனில் மெய்வெளி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டது. தமிழர் தகவல் நடுவம், நமது ஈழநாடு இணைந்த அனுசரணையோடு Ilford இல் அமைந்துளள்ள The Ursuline Academy மண்டபத்தில் நடைபெற்றது. கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாக, சிற்பியாக, நாவலாசிரியராக, வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தன் உணர்வுகளை, ஈழமண் சார்ந்த வரலாற்று நகர்வுகளை பதிவாக்கி பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கிய நாவண்ணன் அவர்களின் நூல்களில் ஒன்றான “வலிகாமம் இருந்து வன்னி வரை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ Deputy Mayor,Cllr Joe Hehir , London Borough of Redbridge அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். ஏதிலிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீர்த்தனனின் பெரும் முயற்சியில் நாவண்ணன் அவர்களின் துணைவியார் சூசைநாயகம் மற்றும் இந்நூலை அச்சேற்ற பாடுபட்ட அவரின் மூத்த மகள் நெலோமி அன்ரனி குரூஸ் இலங்கையில் இருந்து வருகை தந்து வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நாவண்ணன் அவுர்களின் பாடல்களில் ஒன்றான -வீரக் குழந்தைகளே என்ற முதல் வணக்க பாடலோடு நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த பாடலை நாவண்ணன்ன பேரக்கழந்தைகளான பாடகர் அனங்கன் மற்றும், பதுமிதா வழங்க, மாமனிதர் நாவண்ணனின் நிழல் உருவப் படத்திற்கு எழுத்தாளர் சந்திரா ரவீந்திரன் அவர்கள் மாலை அணிவித்தார். நாவண்ணனின் எழுத்துலக வாழ்க்கையில் அவரின் பக்கபலமாக இருந்தவரும் தமிழீழ தேசியத் தலைவரை நேரடியாக சந்தித்தவருமான நாவண்ணனின் அவர்களின் துணைவியார் திருமதி கபிரியேல் டொலறோஸ் சூசைநாயகம் அவர்கள் மாண்பேற்றல் நினைவுப் பதாகை வழங்கி கௌரவிக்கப்பட்டர். மெய்வெளி வெளியீட்டகம், தமிழர் தகவல் நடுவம், நமது ஈழநாடு இணைந்து அவருக்கான மாண்பேற்றல் நினைவுப் பதாகை வழங்க, சாம் பிரதீபன் மாண்பேற்றல் வாழ்த்து வரிகளை வாசித்தார்.

1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 6 லட்சத்திற்கும், அதிகமான மக்கள் இரவோடிரவாக வெளியேறிய அந்த நாட்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த பூமி, சேர்த்து செழித்த சொத்துகள், காணி கட்டிடடம், கால்நடைகள், செல்லப்பிராணி இதற்குமேலாய் வயோதிப பெற்றோர்கள் பலரை விட்டு விட்டு, தம் உயிரை மட்டும் காத்துக் கொள்ள அங்குல அங்குலமாய் செம்மணி வீதி கடந்த யாழ்ப்பாண இடம்பெயர்வின் அவலம் நடந்து 31 வருடங்களின் பின் மாமனிதர் நாவண்ணன் அவர்களின் நூல் வெளியாகியிருக்கிறது. இந்த வரலாற்றின் தன்நேரடி அனுபவங்களோடு, ஈழப்போராட்ட வரலாற்றின் முக்கிய சம்பவங்களோடு தொடர்புபட்ட மனிதர்களின் நேரடி சாட்சியப் பதிவாக இந்த நூல் உருப்பெற்றிருக்கிறது.

நூலின் பிரதான கதைக்களதில் நடமாடிய பலர் பங்கு கொண்ட இந்த நூல் வெளியீடு, மெய்வெளி தொலைக்காட்சியின் இயக்குனர்களில் ஒருவரும் ஊடகவியலாளருமான றஜித்தா சாம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வெளியீட்டுரையை ஊடகவியலாளாரும், கவிஞரும் மெய்வெளி வெளியீட்டக இயக்குனருமான சாம் பிரதீபன் அவர்கள் வழங்கினார். ஈழ விடுதலை வரலாற்று நூல்களை புலம்பெயர் தேசங்களில் அறிமுகம் செய்ய வேணடியதன் தேவை, ஆசிரியர் ஏன் இந்த நூலை எழுதினார், எந்தக் கேள்விகளுக்கு ஆசிரியர் பதில் தேடுகிறார் என்பதனை சுட்டிக்காட்டி வாசகருக்கு ஒரு தெளிவான திசையை காட்டும் வகையிலும் ஈழப்போராட்ட வரலாற்றின் தேடலில் வாசிக்க வேண்டிய நூலாக நாவண்ணன் அவர்களின் நூல் அமையப்பெற்றது பற்றியும் பேசினார்.

இந்நூலிற்கான வரலாற்றுப் பார்வையில், புலம்பெயர் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் விமர்சகருமான மாதவி சிவலீன் அவர்கள், நூல் அமையப்பெற்ற காலப்பின்னணி, சமூக சூழல், சமூக மாற்றம் மற்றும் எழுத்தாளரின் நோக்கம் ஆகியவற்றுடன் இணைத்து புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நயப்புரையை நிகழ்த்தி இருந்தார். 1995ம் ஆண்டின் பேரிடர் நிகழ்வாக கொள்ளககூடிய யாழ்ப்பாண இடம்பெயர்வின் ஒரு சாட்சியமாக நின்று கொண்டு, அவருடைய தந்தையார் கலாநிதி காரைசுந்தரம்பிள்ளைக்கும் எழுத்தளர் நாவண்ணன் அவர்களும் இருந்த தொடர்பு பற்றியும் விவரித்திருந்தார். நூலின் மொழிச் சிறப்பையும்,உணர்களையும், வலிமையையும் எழுத்தாளரின் படைப்பாற்றல் கோணங்களில் புரிந்துகொள்ள, நூலிற்கான நயப்புரையை வழங்கி இருந்தார் சதீஸ் நவரட்ணம். வரலாறு சார்ந்த நூல்கள் எழுத்தப்படும் போது அவை வாசகர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் அரசியல் பார்வையை மாற்றக்கூடியவை. அவை ஒரு புதிய கோணத்தில் அரசியலைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ஈழத்தமிழ் விடுதலைப்போராட்ட அரசியல் சூழல், ஆட்சியாளர்களின் முகம், தமிழீழ விடுதலை இயக்கம், அதன் தலைமைத்துவம், வழிநடத்தல், சமூகவிடுதலை தொடர்பான அதன் அக்கறை, அந்த இயக்கத்தின் நகர்வில் நடந்த சமூக மாற்றம் ஆகியவற்றின் அரசியல் பிரதிபலிப்பை வரலாற்றோடு புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரசியல் விமர்சகர் பாலா மாஸ்டர் என்று அனைவராலும் அறியப்பட்ட திரு பால கிருஷ்ணன் உரையாற்றி இருந்தார்.

நூலின் முதல் இரண்டு பிரதிகளையும் London Borough of Redbridge பிரதி மேயர், திருமதி இக்பால் மற்றும் மாமனிதர் கவிஞர் காசியானந்தனின் மகள் தேனல்லிக்கும் வழங்கி வைத்தார். சிறப்பு பிரதிகளை தமிழர் தகவல் நடுவத்தின் பிரதிநிதியாக திரு போஸ் அவர்கள் வழங்கி வைத்தார்.

கவிதைகளாலும் விடுதலைப் பாடல்களாலும் ஈழவிடுதலை இலக்கியத்திலும் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்திய மாமனிதர் நாவண்ணனின் நூல் வெளியீட்டினை சிறப்பிக்கு முகமா கவிஞரும் மெய்வெளி வெளியீட்டக இயக்குனருமான சாம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கவியரங்கம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. “என்னை உயிர்ப்பியுங்கள்” என்ற தலைப்பில் நாவண்ணனின் புதல்விகளான நெலோமி அன்ரன் குரூஸ், வேணி றொபின்சன், ஆகியவர்களோடு, ரேணுகா உதயகுமார், ,திருப்பரங்குன்றன் காரை சுந்தரம்பிள்ளை, நிரோஷினி ரமணன் ஆகிய கவிஞர்கள் பங்கேற்றிருந்தனர்.

நிறைவாக நாவண்ணன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அவருடைய மருமகன் கதிர்ச்செல்வன் நன்றியுரையை வழங்கியதோடு, மாமனிதர் நாவண்ணன் நினைவாக திரு கீர்த்தனன், திரு போஸ் மற்றம் திரு சாம் பிரதீபன் ஆகியோரை கௌரவித்து நினைவுப் பதாகை வழங்கினார்.

ஈழவிடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எழுத்துருப்பெறும் நூல்களின் புனைவிற்கும், திரிபுக்கும் உண்மைத்தன்மைக்கும் இடையில் இருக்கும் ஆபத்தான போக்கை “வலிமாமம் இருந்து வன்னி வரை” என்ற நாவண்ணனின் நூல் வரலாற்று ஆதாரங்களுடன் வாசகர்களுக்கு முன்வைப்பதன் மூலம் சுய சிந்தனையை தூக்கிவிடுவதோடு குழப்பமுற்றுள்ள சமூகத்தின் தெளிவுநிலைக்கு வழிகாட்டியமாக அமையும் என்ற நம்பிக்கையோடு, மெய்வெளி இந்த வெளியீட்டு விழாவை முன்வந்து நிகழ்த்தியருந்தமை குறிப்பிடத்தக்கது.















































