UK இல பிள்ளை போடுற கக்காவுக்கும் காசு! என்று அந்த நடிகை சொன்னதும் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது.
- றோய் பீற்றர் -
UK இல பிள்ளை போடுற கக்காவுக்கும் காசு!
என்று அந்த நடிகை சொன்னதும் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது.
– றோய் பீற்றர் –

கடந்த மே 24ம் திகதி நியூ மோல்டன் பகுதியில் நடைபெற்ற Skantha Night நிகழ்ச்சியில் மெய்வெளி அரங்க இயக்கம் மேடையில் தந்த கனவுத் தேசம் நாடகத்தைப் பார்த்து இரசித்த அனுபவத்தை என்னவென்று சொல்வது. அவர்கள் மேடையேற்றிய அந்த நாடகத்தின் ஒரு கட்டத்தில்தான் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றது. அது மாத்திரமல்ல தொடக்கத்தில் இருந்து முடியும் மட்டும் இந்த நாடகத்தில் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் முள்ளைப் போல பார்த்தவர்கள் எல்லா மனங்களிலும் குத்திக் குத்தி உறைக்கச் செய்திருந்தது. நகைச்சுவையாகவும் குத்தினார்கள் சீறியசாகவும் குத்தினார்கள். கிட்டத்தட்ட ஒரு 15 நடிகர்கள் ஒரு அரை மணித்தியாலம் மேடையை தூக்கி நிமிர்த்தி எங்களை எல்லாம் வேறு திசைக்கு கண் அகலவிடாதபடி தங்கள் நடிப்பகளுடன் ஒட்ட வைத்திருந்தமை நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஒரு மேடை அனுபவம்.
வெளிநாட்டுக் கனவுகளோடு தாயகத்தில் காத்திருப்பவர்களின் மனநிலையையும் அந்த மனநிலையை போலியாக ஏற்படுத்தக் காரணமான வெளிநாடுகளில் வாழும் எம்மைப் போன்றவர்களின் உளவியலையும் துளாவி எடுத்துச் சொன்னது நாடகம்.

நாடகம் தொடங்க முதல் அதை நெறிப்படுத்தினவர் சொன்னார் “நாங்க நாடகம் போடுறது மகிழ்வழிப்புக்காக மட்டுமில்ல சமூக மாற்றம் மற்றது சமூக விழிப்புணர்வுக்கும் சேர்த்துத்தான்” எண்டு. அவர் ஏன் அப்பிடிச் சொன்னவர் எண்டு நாடகம் முடியத் தான் எனக்கு நல்லா விளங்கினது. அப்ப வரைக்கும் அதில வந்த பல வசனங்கள் எனக்குள்ள திரும்ப திரும்ப கேட்குது.
– முத்துக்குளிக்குது சனம் முடிஞ்சா போயிடவேணும்.
– மனிதர்கள் நீங்கள் இன்னமும் இருக்கிறீர்களா?
– வரேக்க என்ர பெயர் அகதி கனபேர் என்னைக் கூப்பிற பெயர் பக்கி
– நாங்க தும்மத் தும்மக் காசு
– இங்க புல்லில பவுண் முளைக்குதெண்டு நினைக்கினம்!
– பூவோடு நார்கூட புரியாத சோகம்
– பரலோகத்தில பரதேசிகள் இருக்கிறதா நாங்கள் கேள்விப்படேல்ல
– கல்லில நெய் வடியுதெண்டு வருகினம்
மேடைத் திரையை அடிக்கடி பூட்டித் திறக்கிற நாடகங்களை இங்க கனக்க நான் பார்த்திருக்கிறேன். இரண்டு காட்சிகளுக்கு இடையே நீண்ட நேரங்கள் காத்திருக்க வேண்டிய நாடகங்களைப் பார்த்திருக்கிறென். கட்டுக் கட்டான வசனங்களைப் பேசிப் பேசி மேடையேற்றிய நாடகங்களில் கடுப்பாகிப்போன சந்தர்ப்பங்கள் எனக்கு இருந்திருக்கின்றன. பல இடங்களில் நாடகம் போடும் தருணத்தை எனக்கு ஒரு இடைவேளையாக எடுத்துக்கொண்டு நான் வெளியேயும் உள்ளேயும் போய் வருவதாக இருந்திருக்கிறேன். லண்டனில் நாடகங்கள் எண்டால் இப்பிடித்தானாக்கும் என்டு நினைச்ச எனக்கு இப்பிடி ஒரு நாடகத்தைப் பார்த்தது பெரிய ஆச்சரியமாக இருக்குது.

காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தபடியே இருந்தன. ஒரு காட்சியின் வெளியேறலுக்கும் அடுத்த காட்சியின் மேடை நுழைவுக்கும் ஒரு செக்கன் கூட தாமதம் இல்லை. எங்கேயாவது நீட்டு நீட்டு வசனங்களை பேசத் தொடங்கும் போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு வெளியே போய் மற்றவர்களுக்கு ஒரு hi சொல்லி வரலாம் எண்டு நினைத்தேன். ஆனால் நாடகம் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை கடைசி வரை எனக்கு தரவே இல்லை. தந்திருந்தாலும் நான் யாருக்கும் hi சொல்லியிருக்க முடியாது. எல்லோரும் என்னைப் போலவே மேடைக்குள் கண்களைப் புதைத்தபடி இருந்தார்கள்.
“இது எங்கள் சனம் சேர்ந்து இசைக்கின்ற பாடல்” என்றபடி அடிக்கடி மேடையில் வருவதும் போவதுமாக இருந்த இரண்டு பெண் நடிகர்கள் அவ்வப்போது வந்து எங்களுடன் கதைத்துவிட்டுப் போவது போல இருந்தது. மேடையில் நடக்கும் காட்சியையும் எம்மையும் கோர்த்துவிட்டுப் போகும் வேலையை அவர்கள் செய்தார்கள். வெளிநாடுகளில் இருந்து தாயகம் போய்வரும் இரண்டு தரப்பட்ட பேர்வழிகளையும் மேடையில் ஒன்றாக நிறுத்தி உரையாட வைத்ததன் மூலம் ஒரு சமநிலையை எமக்குள் தந்து நாம் இதில் யார் என்ற ஒரு சிந்தனையை எமக்குள் ஏற்படுத்தியது நாடகம். படித்ததாலோ படிக்காதுவிட்டாலோ உழைத்தாலோ உழைக்காத சொம்பேறிகளாக இருந்தாலோ அறிவு இருந்தாலோ இல்லையோ கெட்டித்தனம் இருந்தாலோ இல்லையோ வெளிநாடு வந்துவிட்டால் வாழ்வு நல்லா வந்திடும் என்ற ஊர்க்காரரின் பிழையான எண்ணத்தை தகர்க்க நாடகம் முனைந்திருக்கிறது என்று புரிந்தது.
நாடகம் முடிவில் எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு முதியவர் சொன்னார். “தமிழரின்ர இயல் இசை நாடகத்தில நாடகம் மட்டும் தான் எல்லாத்தையும் விட நல்லாக் கீழ கிடந்தது. அதை தரமா மேல கொண்டுவர இப்பிடி ஒரு கூட்டம் வெளிக்கிட்டது எனக்கு சரியான சந்தோசம் தம்பி.”
நாடகம் முடிய அதன் மலசல கூடம் போகும் வழியில் நாடகத்தை இயக்கியவரைக் கண்டேன். பெயரைக் கேட்டேன் ‘சாம்’ என்று சொன்னார். அந்த வழியால் வந்து வந்து அவரைப் பாராட்டிப் போன பலருக்கும் அவரை முன்னமே தெரிந்திருக்கிறது. என்னைத் தவிர. எப்படி இருந்தது நாடகம் என்று கேட்டார். நான் உண்மையை சொன்னேன். அதை எழுதித் தர முடியுமா என்று கேட்டார். இதோ எழுதியிருக்கிறேன். வாயால் சொன்னதை வார்த்தைகளால் சரியாக எழுதியிருக்கிறேனோ தெரியாது. ஏதோ முயன்றிருக்கிறேன். நல்லவற்றை மட்டுமல்ல நாடகம் பற்றிய தர்க்க ரீதியான கருத்துக்ள் இருந்தாலும் எழுதுங்கள் என்றார். அந்த நேர்மை எனக்குப் பிடித்திருந்தது.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மெய்வெளி! நீங்க நாடகம் போட்டு இனி நான் வந்து பார்க்காவிட்டால் எனக்கு அது பெரிய இழப்பு எண்டு விளங்குது. ஆனா நான் லண்டனுக்கு வெளியில இருக்கிறதால சாத்தியப்படுமோ தெரியாது. மீண்டும் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
நன்றி.






