ஜனாதிபதி வேட்பாளர் ரணில் : மறைமுகமாக  பச்சைக்கொடி காட்டிய  மகிந்த.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தன்னால் முடியாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது மிக தீவிரமான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி வேட்பாளரை தான் நியமிப்பதன் மூலம் வேட்பாளராகும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு தன்னுடன் மனஸ்தாபம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு உறுப்பினர்களே பொருத்தமான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரித்துள்ளார். இலங்கைத்தீவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தமக்கான வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நாமல் ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்குவதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் உந்து சக்கியாக அமைந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.