ஜனாதிபதி தேர்தல் தேர்தல் குறித்து வெளியான தகவல்கள்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு திட்டமிட்டபடி இந்த தேர்தல் நடைபெறும் என தனது அமைச்சரவைக்கு ரணில் விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த ஜனாதிபதியை இணங்கச் செய்யும் பசில் ராஜபக்சவின் முயற்சி தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் விக்ரமசிங்க தேர்தல்கள் குறித்து ஆலோசித்ததாகவும் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எனினும், பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை களத்தில் இறக்காது விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளிக்கும் என்று நம்பப்படுகிறது.

பொதுஜன பெரமுன ஏற்கனவே பிளவுபட்டுள்ள நிலையில் சில உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பெரமுன பிரசாரம் செய்து வருகிறது.