சிங்கள- பௌத்தர்களின் பொறுமையைக் கோழைத்தனம் என்று கருத வேண்டாம்:  தமிழர்களுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை.

வடக்கு கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிறமத அடையாளங்களை வைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள- பௌத்தர்களின் பொறுமையைக் கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள – பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்’ என தேசியப் பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்  நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு அரசமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கை செயற்படுத்தும் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தால் வழங்கப்படவில்லை.19 ஆவது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் பாரிய இழுபறிநிலை ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா என்பதை முதலில் ஆராய வேண்டும். வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? ஆகவே தெரியாத விடயங்களைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசக்டாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பேசி பிரச்சினைகளைத் தூண்டி விடுகிறார்கள். பின்னர் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள். இலங்கை சிங்கள – பௌத்த நாடு என்பதால்தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள். பௌத்த தொல்பொருள் மரபுரிகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை காட்சிப்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம்’ என்று சரத் வீரசேகர எச்சரித்தாா்.