ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – கல்வி அமைச்சர் உறுதி !

Keshihan Ilamuruganathan- திருகோணமலை.

கிழக்கு மாகாணத்தில் 4200 இற்கு மேற்பட்ட ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இடப்பற்றாக்குறை குறித்து அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் இதற்கு விரைவில் சாதகமான தீர்வு வழங்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்தார்.

நேற்றைய தினம்(30) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஒ‌ட்டுமொ‌த்தமாக 4200ற்கு அண்மித்த ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு  நிரந்திர தீர்வொன்றினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

ஆளுநரின் கோரிக்கையை கருத்திற் கொண்டு, நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் உறுதியளித்த கல்வி அமைச்சர், முதல் கட்டமாக மூன்று மாத காலத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,ஆளுநரின் சிரேஸ்ட ஆலோசகர் டாக்டர் அமல் அரசடி சில்வா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.