4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்.

உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது.

அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது. முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்னர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள்.

இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதனை அந்த நகர மக்கள் இது மிசோரியின் ஒரு அதிசயம் என தெரிவித்து உள்ளனர். அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.