சுவிஸ் கிராமத்தை மலைப்பாறை சரிந்து மூடும் ஆபத்து!

Kumarathasan Karthigesu

அடுத்த சில நாட்களில் அனர்த்தம் நிகழலாம் மக்கள் வெளியேற்றம்

பூமி வெப்பம் அடைவதால் அல்ப்ஸ் பனி மலை உருகுவதன் விளைவு மலைக் கிராமங்களது எதிர்காலத்தைப்பெரும் அச்சுறுத்தலில் விட்டிருக்கிறது.

அழகிய அல்ப்ஸ் மலையடிவாரக் கிராமங்கள் சுவிஸ் நாட்டின் சிறப்பு அடையாளங்கள். அத்தகைய சின்னஞ்சிறு கிராமங்களில் ஒன்று தான் பிறீன்ஸ் (Brienz). சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கும் அக் கிராமத்தை எந்த நேரமும் பாரிய மலைப்பாறைகள் சரிந்து மூடி வழித்துத் துடைக்கலாம் என்று புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் கிராம வாசிகள் அனைவரும் தங்கள் பெட்டி படுக்கைகளோடு 48 மணிநேரத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பண்ணைக் கால்நடைகளும் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன.

நகர நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு மக்களை வெளியேறும் உத்தரவை விடுத்தது.

பல தசாப்தங்களாக அங்கு வாழ்ந்து வந்த கிராமவாசிகள் திடீரென வீடுவாசல்களை விட்டு ஓட நேர்ந்ததால் பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமத்துக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டு அது மூடி முடக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் கிழக்கே Graubünden எனப்படும் கன்ரன் நிர்வாகப் பகுதியில் அமைந்துள்ள பிறீன்ஸ் (Brienz) கிராமம் இப்போது வெறுமையாகக் காட்சியளிக்கிறது.

சுமார் இரண்டு மில்லியன் கன மீற்றர் அளவுகொண்ட பாறை மலையிலிருந்து விலகிவருகிறது. அது அடுத்த மூன்று முதல் பத்து நாட்களுக்குள் சரிவடைந்து (rockslide) கிராமத்தை மூடலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பாறைத் துண்டங்கள் ஏற்கனவே மலையடிவாரங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அல்ப்ஸ் மலையில் நூற்றாண்டு காலமாக அசையும் நிலையில் இருக்கின்ற கற்பாறை நிலத்திலேயே இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. அசைவுகள் கிராம வீடுகளைப் பலவீனப்படுத்தி உள்ளன.

சமீப காலமாகப் பாறையின் விலகல் வேகமாக விரிவடைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. பாறை பிளந்து கிராமத்தை அழிக்குமா என்பதை நிச்சயமாகக் கூற முடியாவிட்டாலும் அது உடனடியாக இப்போதே நிகழ வாய்ப்பிருப்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“எந்தளவு சேதம் ஏற்படும் என்பதை உடனடியாக எதிர்வு கூறிவிட முடியாது. நாங்கள் பூமி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தாமல் விடுவோமானால் அல்ப்ஸ் மலைச் சூழலில் இது போன்ற பாறைச் சரிவு அழிவுகள் தொடரலாம்” -இவ்வாறு லூசான் பல்கலைக்கழகப் (University of Lausanne) பேராசிரியர் மிசெல் யாப்போயேடோப் (Michel Jaboyedoff) தெரிவித்திருக்கிறார்.

பாறைச் சரிவு ஏற்படும் பட்சத்தில் அவசர காலத் தலையீடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக, சுவிஸ் மத்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு கிராமத்திற்கு மேலே சில கிலோ மீற்றர்கள் பிரதேசத்தில் ட்ரோன்கள் உட்பட வான் பறப்புக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ஊரை விட்டு வெளியேறி வந்தவர்கள் தங்கள் வீடுவாசல்களை மீண்டும் சென்று காண்போமா என்ற பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">