ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா அங்கீகரிக்க கோரி பிரச்சாரம் ஆரம்பித்துவைப்பு.

இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) சர்வதேச மட்டத்திலான பிரச்சார போராட்டம் ஒன்றை கடந்தவாரம் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அதன் முதல்கட்டமாக, கனடாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழின அழிப்பிற்கான நினைவாலத்துடன் (Tamil Genocide Memorial, Canada) இணைந்து, பிரித்தானிய பிரதமரை நோக்கிய இணையவழி கையொப்ப போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பிரிட்டன் பாராளுமன்றம், சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
“இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகமும் ஊடகங்களும் அமைதிகாத்துவருவது எமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாடு மற்றும் தமிழீழத்திற்கு வெளியே மலேசிய தவிர்ந்த பெரும்பான்மையான புலம் பெயர் வாழ்விடமாக கனடா உள்ளது. கனேடிய பாராளுமன்றம் கடந்த வருடம் 2022 இல் May 18 தினத்தை தமிழின அழிப்பு நினைவு தினமாக (Tamil Genocide Remembrance Day) முழுமனதாக ஏற்று கொண்டதுடன் சிறிலங்காவினால் தமிழின அழிப்பு நடைபெற்றதையும் ஒருமனதாக பிரேரணை ஊடக ஏற்றுக்கொண்டுள்ளது. பல தமிழ் தன்னார்வலர்களும், அமைப்புகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் 17 ஆயிரத்திற்கு மேலான ஆதரவு கையொப்பம் பெறப்பட்ட நீண்ட கால கோரிக்கைகளும் (https://change.org/tamilgenocide) இதற்கு காரணமாகின. அத்துடன் கனடா மற்றும் அமெரிக்காவில் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இராணுவ தளபதிகளுக்கு உள்நுழைவு தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது”

மேலும் “பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இந்த கோரிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

ஈழ தமிழ்மக்கள் இன்றும் இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியானதுமான இன அழிப்பை அனுபவித்துவருகின்றார்கள்.

பாரிய இன அழிப்பு இடம்பெற்று 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழின அழிப்பு என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது அவசியம் என அதற்கான தரவுகளுடன் வலியுறுத்துகிறது இந்த கோரிக்கை. தமிழீழத்தில் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு ஒரு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையாகவும் புலம் பெயர் சந்ததி தமது வரலாற்றை முறையாக அறியவும் இது போல் ஏனைய சமூகங்களிலும் எதிர்காலத்தில் இன அழிப்பு நடைபெறாமல் இருக்கவும் சிறிலங்காவின் தமிழின அழிப்பை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்து நீதிக்கு வழிகோலுவது மிகவும் அவசியம் என்றும், இந்த கோரிக்கைக்கு தனிநபர்களும் அமைப்புக்களும் ஆதரவை வழங்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளர்.

தனிநபர்கள் தமது ஆதரவை வழங்க பின்வரும் இணைப்பின் மூலம் கையெழுத்து இடுவது மட்டுமன்றி, நண்பர்களுடனும் பகிர்ந்து மேலும் ஆதரவு வழங்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்;
https://www.change.org/p/united-kingdom-to-officially-recognize-sri-lanka-s-genocide-against-tamils

இதேபோல, இந்த போராட்டத்தில் இணையவிரும்பும் அமைப்புக்கள் பின்வரும் இணைப்பில் தமது விபரங்களை பதிவுசெய்து உதவும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்;
https://docs.google.com/forms/d/1IkAx8DD-wUqNOht5duUdcQHdKASMIc5RfJebewfjtsQ/edit