பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல இருப்பவர்களுக்கு வசதி கருதியே சற்று பிற்படுத்தி இருக்கிறோம்.அத்துடன் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் அதற்கு மாற்று வழியை தெரிவிக்க  வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த சட்டமூலத்துக்கு எதிராக போராட்டங்களையும் சிலர் முன்னெடுத்திருந்தனர். தற்போது நீதிமன்ற விடுமுறை காலமாகும்.

இவ்வாறான நிலையில் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தால். அதனை எதிர்ப்பவர்களுக்கு நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டே சற்று தாமதித்து சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.அத்துடன் சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல யாராவது எதிர்பாத்திருந்தால், அவர்களுக்கு அந்த ஜனநாயக உரிமை இருக்கவேண்டும். அதனை கருத்திற்கொண்டே சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை சற்று தாமதித்திருக்கிறோம். மாறாக அரசாங்கம் போராட்டத்துக்கு அஞ்சி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.