புலம்பெயர் அமைப்புகளின் தடை நீக்கம் ஒரு ஏமாற்று நாடகம்:அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள் தாம் தடை செய்த அமைப்புகள் ஒரு சிலவற்றினதும் நபர்களினதும் தடைகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் கால சூழ்நிலையில் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றிற்கும், தனி நபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் என்பது தமிழர் அரசியல் நலன் சார்ந்த ஒன்று அல்ல அது பேரினவாத அரசியல் நலன் சார்ந்தது என்றும் தம்மால் பொருளாதார இருளுக்குள் வீழ்த்தப்பட்ட நாட்டை மீண்டும் உயிர்பிக்கும் சர்வதேச தந்திர உபாயமாகும் என்பதை தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளும், நபர்களும் புரிந்து கொள்வதோடு இத்தகைய நரி தந்திரத்திற்குள் வீழ்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு புகழ் பாடுவோரும் தங்கள் அரசியல் நலன்களுக்காக தமிழர்களை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கேட்டுக் கொள்கின்றது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படல் வேண்டும் என குரல் எழுப்பிய போதும் அது தொடர்பில் மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள் தாம் தடை செய்த அமைப்புகள் ஒரு சிலவற்றினதும் நபர்களினதும் தடைகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே என குறிப்பிட்ட அவர் பேரினவாத ஆட்சியாளர்களின் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டின் யுத்த நீட்சியும் அவர்கள் மேற்கொண்ட பொது சொத்துக்களின் கொள்ளையிடலாலுமே நாடு இத்தகைய வீழ்ச்சிக்கு காரணமாயுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மீளாதவர்கள் தேசத்துரோக செயற்பட்டார்கள் என அடையாளப்படுத்தியவர்களை தற்போது விடுவிப்பது என்பது சர்வதேச தேச ரீதியில் அவர்களை தமிழர்களுக்கு எதிராக பாவிக்க திட்டமிடுகின்றார்கள்  என தெரிவித்துள்ளார். தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளையும் நபர்களை மட்டும் அல்ல இதற்கு சார்பாக ஜனாதிபதிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நன்றி கூறி கூஜா தூக்கும் அரசியல்வாதிகளையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து சர்வ தேசத்திலும், உள்ளூரிலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போக செய்வதும் இதன் இன்னுமொரு நோக்கம் என குறிப்பிட்டார்.