மன்னார் சதொச மனித புதைகுழி விசாரணை குறித்து பொலிஸாருக்கு உத்தரவு
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழி தொடர்பான விசாரணைகள் மூன்றரை வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஏ. எஸ்.ஹிப்துல்லா ஒக்டோபர் 17ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக மாகாண நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
28 சிறுவர்கள் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் வெகுஜன புதைகுழியில் அகழ்வுப் பணியை மீண்டும் ஆரம்பிக்குமாறு 2022 பெப்ரவரி 22 ஆம் திகதி மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு மே மாதம் மன்னார் நகரில் சதொச கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்களுக்கு என அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கும் வரை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
மன்னார் சதொச மனித புதைகுழியை தோண்டும் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச, விசாரணைகளை மீள ஆரம்பிப்பதற்கான செலவுகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை மே 18ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக நேற்று (17) நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டால் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஊடாக அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என குறித்த அலுவலகம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளதாக நீதிமன்ற ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, புதைகுழி குறித்த அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தமது தரப்பு ஆதரவை வெளிப்படுத்தினார்.
குற்றச்செயல் இடம்பெற்ற இடம் என தீர்மானித்து மன்னார் சதொச புதைகுழியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தடயவியல் நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் விசாரணையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் (Beta analytics) நிறுவனம், அவை கி.பி 1404 – 1635 நூற்றாண்டுகளை சேர்ந்தவை என தீர்மானித்திருந்தது.
அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்தின் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு, வெகுஜன புதைகுழியி காலம் குறித்து நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய புதிய விசாரணைகளை 2019 ஜூலையில் ஆரம்பித்திருந்தார்.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதைப் போன்ற எலும்புகளும் வெகுஜன புதைகுழிகளில் காணப்பட்டன.