காதலுடனும், பக்தியுடனும் அரங்கைப் பரவசப்படுத்திய நாயகி அருவி ஜெயகாந்தன்

- றஜித்தா சாம் - மெய்வெளி இயக்குனர்

உலகெலாம் உன்னத கலையாக கொள்ளப் படுகின்ற பரதக் கலையை, தனக்குள் ஆத்மாத்தமாய் சுவீகரித்துக் கொண்ட செல்வி அருவி ஜெயகாந்தனின்  அரங்கேற்றம், ஒக்டோபர் 09ம் திகதி  லண்டன் HAYES BECK THEATRE  இல் பார்த்தோர் மனங்களில் ரம்மியமாய் அமர்ந்து கொண்ட  நிகழ்வாக அமைந்திருந்தது.

 

ஒவ்வொரு பரதநாட்டிய நடனக் கலைஞருக்கும், அரங்கேற்றம் அவர்களின் நடன வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாகின்றது. பாவ, ராக தாளத்தை பக்தியோடு உள்வாங்கி, நீண்ட காலப்பயிற்சியோடும் அர்ப்பணிப்போடும் 11 வருடங்கள் கற்றுக்கொண்ட பரதக் கலையின் பெருமுகிழ்ப்பை பக்குவமாய் தனது அரங்கப் பிரவேசத்தில் வெளிப்பாடுகை செய்திருந்தார். குரு ஸ்ரீமதி பிரசாந்தி உதயபாபு அவர்களின் நெறிப்படுத்தலோடும், ஆசியோடும் பரதக்கலையின் அரங்கேற்ற மார்க்கத்தின் புஷ்பாஞ்சலி முதல் தில்லானா வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஆடல் உருப்படிகளையும்  துடிப்புடனும் மெடுக்குடனும் ஆனந்தத்தோடு  வெளிப்படுத்தி, பார்வையாளர்களை ஒன்றிக்கவைத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மலைய மாருதம் ராகத்தில் தனது முதல் அங்கமாக புஷ்பாஞ்சலியையும், அதனைத் தொடர்ந்து விருத்தத்தோடு மிஸ்ரசாப்பு தாளத்தில் அலாரிப்பில் மேடையில் பிரவேசித்தார் அருவி  ஜெயகாந்தன்.  தீவிர ஆற்றலோடும், உற்சாகத்தோடும், பைரவி ராகத்தில் மாமேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் இசை யமைக்கப்பட்டு, ஆசிரியை ஸ்ரீமதி பிரசாந்தி அவர்களால் நடன வடிவமைக்கப்பட்ட  ஜதீஸ்வரத்தின் தாளக்கதியும் மெய்யடவுகளும் கோர்வைகளாய் அருவியை அரங்கில் துணிவுடன் உலாவரச் செய்தன. தொடர்ந்து வழங்கிய சப்தத்தில் தனது அபினய வெளிப்படுத்தலை  ஆரம்பித்த அருவிக்கு அழகியல்  அபினய வெளிப்பாடுகளை வெளிப்படுத்த அற்புதமாய் அமைக்கப்பட்டிருந்தது வர்ணம். லண்டன் கனகதுர்க்கை அம்மனை  அரங்கில் பக்தியோடு தரிசிக்கசெய்த உருடிப்படி இது. கருணையின் நாயகி கனகதுர்க்கா நின் பாதம் சரணடைந்தேன் தேவி எனத்தொடங்கும், குரு  பிரசாந்தியின் வரிகளோடு, காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இசைக்கோர்வையில் அமைந்த இந்த வர்ணத்தில்  அம்மனின் பிரசன்னத்தை தனது நடன அளிக்கையால் அரங்கில் இருந்தவர்களுக்கு வெளிப்படுத்தி இருந்தார் அருவி.

காதலுடனும்,  பக்தியுடனும் அரங்கைப் பரவசப்படுத்திய நாயகி, தனது  தனித்துவ, அசத்தலான நிருத்த நிருத்திய வெளிப்பாடுகளால் பதம், கீர்த்தனங்கள், அஸ்டபதி, ஜாவளி என தொடர்ந்த உருப்படிகளால்  ஆனந்திக்கச் செய்து, கமாஸ் ராகத்தில் தில்லானாவில் தனது வேகத்தையும் விறுவிறுப்பையும்  அவரது பாதவேலைப்பாடுகளில் கச்சிதமாக  காட்டி அரங்கம் நிறைந்த கரகோசத்தோடு மங்களம் சொல்லி நிறைவு செய்திருந்தார்.

லண்டன் சாய் நர்த்தனஷேஷ்திரா பரதநாட்டியப் பள்ளியின் உருவாக்கத்தில் வெளிக் கொணரப்பட்ட கலைஞர் அருவி  மூன்று மணிநேரங்களுக்கு மேலாக திடமான உடல் உள ஆற்றலோடும் தன்னம்பிக்கையோடும், மேடையை தன்னகப்படுத்தி பார்ப்போரை மெய்சிலிர்க்கவைத்திருந்தார்.
அருவியின் அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு, ஆத்மாத்த கலை ஆர்வம் மற்றும் பரதநாட்டியத்தில் ஈடுபாடு போன்றவற்றுக்குச் சான்றாக, ஸ்ரீமதி பிரசாந்தி உதயபாபு அளித்த நுணுக்கமான பயிற்சி அரங்கேற்ற சிறப்புக்கு  காரணம் என்று சொன்னாலும், அணிசேர் வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு  அருவியை அரங்கில் பிரகாசிக்க செய்திருந்தது. ஸ்ரீமதி திலசக்தி ஆராமுதனின் பக்தியும் கம்பீரமும் கனிவும் குழைவும் மிக்க குரல்வளத்தால் பரதக்கலையின் ரச வெளிப்பாடுகளை அற்புதமாய் வெளிப்படுத்த ஊக்கியாக இருந்தது. மாபெரும் மிருதங்க வித்துவான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கம் அரங்கத்தின் ஆதாரமாக, பிரசாந்தியின் நேர்த்தியான நட்டுவாங்கம் தாளக்கட்டுப்பாடுகளை கட்டுக்குள் வைத்திருந்தது. பிரபல வயலின் இசைக்கலைஞர் ஸ்ரீ ஞானசுந்தரம் தேசிகர் அவர்களின் இசைப்பிரயோகமும், புல்லாங்குழல் வித்துவான் ஞானவரதன் பிச்சையப்பாவின் மாயம் செய்த குழல் இசையும் பார்வையாளர்களை கிறங்கவைத்ததோடு அருவின் நடன பாவங்களுக்கு ஒத்தாசை செய்திருந்தன. சிறந்த இசைக்கலைஞர்கள் குழுவால்அரங்கேற்றம் அலங்கரிக்கப்பட்டி ருந்தது.

பிரதமவிருந்தினர், பரத நாட்டிய பெருங் கலைஞரான ஸ்ரீமதி கீதா ஸ்ரீதர் அவர்களின் ஆத்மாத்தமான உரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அருவியின் குலுக்கல் நடையிலும், அங்க சுத்தத்திலும், பாவரச வெளிப்பாட்டிலும், அவர் கண்ட திருப்தியை  பாராட்டுக்களாக வழங்கியிருந்தார். தற்கால முதிர்ச்சியற்ற, அவசர அரங்கேற்றங்களைத் தவிர்த்து பரதக்கலையின் பூரண கலைத் தேர்ச்சியின் தேவைகளை எடுத்து ரைத்ததோடு  செல்வி அருவியை பக்குவமாய் பயிற்றுவித்த குருவையும்  கீதா ஸ்ரீதர் வெகுவாக பாராட்டினார். அதேவேளை பொறுமை மிக்க பெற்றோர்களின் ஆதரவால்தான் சிறப்பான கலைஞர்களை உருவாக்க முடியும் என்பதற்கு சாட்சிகளாக நின்ற அருவியின் பெற்றோர்களையும் அவர் மெச்சினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக, சுவிஸில் இருந்து சர்வதேச கம்பன் கழக தலைவர் ஸ்ரீ ஜகத்குருசுவாமி சரஹணபவ அவர்களும், ரட்ணம் அறக்கட்டளையின் இயக்குனர் வைத்தியர்  திரு நித்தியானந்தன் மற்றும் அவர் துணைவியாரும், OBEL தலைவர் திருமதி அம்பிகா தாமோதரம் அவர்களும்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

பரபரப்பான புலம்பெயர்  சூழலில்  காலப் பொறுமையோடு கலையின் பரிபூரண வெளிப்படுத்தலை ஸ்ரீமதி பிரசாந்தி உதயபாபு தனது மாணவிக்கு வழங்கி இருந்ததை ஆடங்கலையின்  ஒவ்வொரு உருப்படிகளின் நிகழ்த்துகையிலும் காணக்கூடியதாக இருந்தது. யாழ்.பல்கலைக்கழத்தின் கற்றலோடு புகழ்பெற்ற கலாஷேத்ராவின் மாணவியான குரு, பிரசாந்தி உதயபாபுவின்  பரதக்கலையின் நேர்த்தியும், தூய்மையும், எளிமையும்  அருவியின் அரங்கேற்றம் காண வந்த கலைப்பெருமக்களிற்கு பூரண திருப்தியைக் கொடுத்திருக்கும் எனறே நம்பலாம். இதேவேளை அருவியின் அரங்கேற்றம் மெய்வெளி தொலைக்காட்சிக்கூடாக நேரலை செய்யப்பட்டு உலகளாவிய பார்வையாளர்களையும் உள்வாங்கி இருந்தது.

பரதநாட்டிக்கலைஞர்கள், கலாரசிகர்கள், உறவினர்கள் நண்பர்கள் என அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் பெரும் பாராட்டுக்களைப் பெற்று நிறைவான அரங்கேற்றமாக அமைந்திருந்தது. ஈழத்தமிழ் இளங்கலைஞர்களில் நம்பிக்கை மிகு கலைஞராக  அருவியை பிரகாசிக்க வைத்த குரு பிரசாந்தி உதயபாபு அவர்களுக்கு நன்றியோடு பாராட்டுதல்களைத் தெரிவிப்பதோடு, இளங்கலைஞர் அருவியின் கலை திக்கெட்டும் மேன்மை யுற ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கிறேன்.