சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் பகடைக் காயாகும் பெண்ணியம்

- கௌரி பரா -

பதினாறாம் திகதி செப்டெம்பர் மாதம் மாஸா அமினி என்கிற இருபத்திரண்டு வயதான ஈரானைச்சேர்ந்த இளம் பெண் ஈரானிய இஸ்லாமிய மதவாதம் பிடித்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு சட்டத்தின்படி அவர் முக்காடு அணியாமல் போனது தான் அந்தப்பெண் செய்த குற்றம். பொலிஸாரினால் அடித்து துன்புறுத்தப்பட்ட மாஸா அமினி ஒரு சில நாட்களில் பரிதாபமாக மருத்துவமனையில் இறந்தும் போனார்.

இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் மேல் அந்த நாடு காலாகாலமாக கட்டவிழ்த்து விடும் மதவாத அரசியல் அதிகாரத்தை எதிர்த்து கொதித்தெழுந்த சக மனிதர்களும் , பெண்களும் , ஈரானைச்சேர்ந்த பெண்ணியவாதிகளும் பல ஆர்ப்பாட்டங்களையும் புரட்சிப்போராட்டங்களையும் அன்றில் இருந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டமானது கடந்த நாலு வாரங்களில் பல பரிணாமங்களில் நடந்து கொண்டிருக்கிறது. பல பல்கலைக்கழக மாணவர்கள் முழுநேரமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் சிலர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிறை உடைப்புக்கள் என்று போராட்டம் பல திசைகளில் உக்கிரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் பெண்களோ அல்லது இனக்குழுக்களோ அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் புரட்சியை முன்னெடுப்பது என்பது ஓர் இயல்பான ஒரு விடயம். அப்படிப்பட்ட ஒரு புரட்சியாகத்தான் தன்னிச்சையாக இந்த போராட்டமும் தொடங்கியது.

அமெரிக்காவில் பெண்கள் கடந்த சில மாதங்களாக கருக்கலைப்புக்கு எதிரான மாநில சட்டங்களை எதிர்த்து வீதிகளில் போராடி வந்தது பல ஊடகங்களில் காட்டப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று, பொதுவாக அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் மீதும் பொலிஸ் காவலில் இருப்பவர்கள் மீதான வன்முறைகளும் ஏராளம் அவைகளை எதிர்த்தும் தன்னிச்சையாக எதிர்ப்பு போராட்டங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. உலகெங்கிலும் பல்லாயிரம் பெண்கள் அரச பயங்கரவாத்த்தினாலும் மதவாத அரசுகளின் கெடுபிடிகளினாலும் பல விதங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. எல்லா கொடூரங்களும் மீடியாவில் பேசப்படுவதில்லை.

ஆகவே ஒவ்வொரு நாட்டிலும் இருக்க கூடிய பல சட்டங்களை எதிர்த்தும் அரச பயங்கரவாதங்களை எதிர்த்தும் அவ்வப்போது இயல்பாக புரட்சிகளும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடத்தப்படுவது இயல்பு.

சமீபத்தில் ஈரானிய சுப்ரீம் அதிபரான அலி கமிமெனை ஆற்றிய ஓர் உரையில் புரட்சியாளர்கள் இந்த இனவாத அரசை கவிழ்க்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய போது ஈரானிய இந்த போராட்டத்தை வைத்து அமெரிக்கர அதன் நலனுக்காக நாட்டின் அமைதியை குலைத்து நாட்டை பிளவு படுத்த நினைக்கிறது என்று தனது உரையில் பகிரங்கமாக கூறினார்.

மேலும் சில நாட்களிற்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலிபோஃனியாவில் உள்ள ஒரு கல்லூரியில் உரையாற்றுகையில் அந்த கல்லூரியில் “ ஈரானை விடுதலை செய் “ – free Iran என்ற பதாதைகளை வைத்து கோஷம் போட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் தான் ஈரான் குடிமக்கள் பக்கமும் ஈரானிய பெண்கள் பக்கமும் இருப்பேன் என்று உறுதி அளித்தார். மேலும் ஈரான் விழித்துக்கொண்டு விட்டது என்று தெரிந்ததும் தான் திகைத்துப்போனதாகவும் இப்படி விழித்துக்கொண்ட ஈரான் இனி சோர்வடையும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவரது உரையில் கூறினார்.

மாஸா அமினியின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் “Jin , jinna, Azadi” ( ஜின், ஜின்னா, அசாடி) என்ற கோஷங்கள் எழுப்பட்டடன, குர்திஸ் மொழியில் இதன் அர்த்தம் “ பெண், வாழ்க்கை, விடுதலை “ . இந்த ஸ்லோகன்கள் குர்திஸ்ய போராளிப்பெண்கள் பயன்படுத்தும் ஸ்லோகன்கள் ஆகும்.

மாஸா அமினி ஈரானைச்சேர்ந்த குர்திஸ் பெண். சிறுபான்மை இனம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஈரானிய குர்திஸ் மக்கள் தங்களை ஈரான்கார்ர்களாகவே பாவனை பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் மொழி கலாச்சாரம் போன்றவற்றை அவர்கள் வீட்டிற்குள் பயன்படுத்துவார்களே தவிர வெளியில் அது சாத்தியம் அல்ல. வீட்டில் அவர்களுக்கு குர்திஸ் மொழியில் ஒரு பெயர் இருக்கும் அந்த பெயரை வைத்து வீட்டில் அழைப்பார்கள். மாஸா அமினியன் குர்திஸ்ய மொழிப்பெயர் ஜின்னா அமினி, ஆகவே மேற்கின் ஊடகங்கள் இந்த விடயத்தை பற்றி எழுதும் போது மாஸாவை அவரின் குர்திஸ்ய மொழிப்பெயரால் அழைக்காமல் அவரின் குர்திஸ்ய அடையாளத்தை மறைத்து அந்தப்பெண்ணின் இன மொழி அடையாளத்தை அழிக்காமல் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள், அவர் பெண்ணாக இருந்த காரணத்தால் மட்டுமல்லாது குர்திஸ்ய பெண்ணாக இருப்பதாலும் கொடூரமாக பொலிஸாரினால் தாக்கப்பட்டார் என்று நம்புகிறார்கள்.

குரத்திஸ் மக்கள் ஈரான் , ஈராக் , சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் சிறுபான்னை இனமாக வாழ்க்கின்றனர், உலகத்தில் நாடற்ற பெரிய சிறுபான்னை இனமாக குர்த்திஸ்ய மக்கள் இருக்கிறார்கள்.

முதல் முதலில் “ ஜின், ஜின்னா அசாடி “ அதாவது “ பெண், வாழ்க்கை, விடுதலை” என்ற கோசத்தை குர்திஸ்ய பெண்கள் 2006 மார்ச் 8 ம் திகதியான பெண்கள் தினத்தில் துருக்கி வீதிகளில் உரக்க சொன்னார்கள்.

சமீபத்தில் மாஸா அமினி யின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆஃகன் பெண்களும் கூட “ஜின் , ஜின்னா அசாடி “ என்ற கோசத்தை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1973 ல் குர்திஸ் மக்களின் சுய நிர்ணய உரிமையைக் கோரி அப்துல்லா ஓச்சலன் தலைமையில் துருக்கியில் ஒரு விடுதலை இயக்கமாக போராடத்தொடங்கினார்கள். PKK என்ற இந்த இயக்கம் தங்களின் தேசத்தின் விடுதலையை எவ்வளவு முக்கியமாக கருதினார்களோ அவ்வளவு முக்கியமாக பெண் விடுதலையை பற்றிய சிந்தனைகளையும் மக்கள் மத்தியில் விதைத்து அதை நோக்கி செயலாற்றி வந்தனர்.

1980 களில் துருக்கிய ராணுவத்தினரால் ஐம்பதினாயிரம் குர்திஸ்ய மக்களும் போராளிகளும் அழித்தொழிக்கப்பட்டனர் அதன் பின்னர் அப்துல்லா ஓச்சலன் துருக்கியை விட்டு வெளியேறி சிரியாவில் பாதுகாப்பி்ல் இருந்து கொண்டு அங்கிருந்தபடி போராட்டத்தை முன்னெடுத்தார்.

பனிப்போர் காலத்தில் சிரியா சோவியத் யூனியனின் நட்பு நாடாகவும் துருக்கி NATO விலும் அங்கத்துவம் வகித்தது. நேட்டோவில் அங்கம் வகித்த காரணத்தினால் துருக்கி சோவியத் யூனியனுக்கும் சிரியாவிற்கும் எதிரி. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அன்றிருந்த சிரிய “பார்த்” அரசு PKK இயக்கத்திற்கும் அதன் தலைவர் அப்துல்லா ஓச்சலனுக்கும் அடைக்கலம் வழங்கி Damascus என்னும் சிரிய நகரில் PKK கொரில்லா இயக்கத்தை வளர்த்து வந்தது. இதில் பத்தாயிரத்திற்கு மேலான போராளிகள் சேர்ந்து கொண்டனர்.

இதே நேரம் சிரியா பார்த் அரசு சிரிய குர்திஸ் மக்களை இன ரீதியாக அடக்கி ஆண்டது, ஆனாலும் PKK அதனது பாதுகாப்பு கருதி தங்கள் நோக்கு துருக்கிய குர்திஸ் மக்கள் விடுதலை என்று காட்டி வந்தது. சிரியா தங்களின் பாதுகாப்பு அரணாக இருப்பதை சாமர்த்தியமாக முடிந்தளவு தக்க வைத்துக்கொண்டது.

90 களின் தொடக்கத்தில் PKK ன் YAJK என்கிற பெண்கள் ராணுவம் கொரில்லா படையாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள எல்லா செயற்பாடுகளிலும் பெண்களின் பங்களிப்பு 40 வீதமாக்கப்பட்டு நடைமுறையில் செயற்படுத்தப்பட்டது பெண்கள் புரட்சி அப்துல்லா ஓச்சலன் தலைமையில் வளர்த்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1991 ல் சோவியத் யூனியன் வீழ்ந்தது. PKK துருக்கியுடன் பல சமாதான ஒப்பந்தங்களை செய்ய முனைந்தும் அது பயனளிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் துருக்கி சிரியாவிற்று அதனது தண்ணீர் விநியோகம் செய்யும் நாடாக விளங்கியதால் அதை ஒரு துருப்பு சீட்டாக வைத்து PKK தலைவர் அப்துல்லா ஓச்சலனை சிரியா வெளியேற்றாவிட்டால் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவோம் என்று துருக்கி சிரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தது.

இதன் பின் அப்துல்லா ஓச்சலன் மாசி மாதம் 15 ம் திகதி 1999 ஆம் ஆண்டு மொசாட்டினாலும் மற்றும் பல நாடுகளின் ஒத்துழைப்போடும் கைது செய்யப்பட்டு துருக்கிய சிறையில் அடைக்கப்பட்டார்.

துருக்கி நாட்டின் அரசியல் சாசன ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக அப்துல்லா ஓச்சலன் செயற்பட்டார் என்று துருக்கி அவர் மீது குற்றம் சாட்டியது. மேலும் மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள்க்கைதியாக துருக்கியின் சிறைத்தீவான இம்ராலி என்ற தீவில் இன்னமும் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அப்துல்லா ஓச்சலன் ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றத்தில் தன்னை விடுதலை செய்யுமாறு முறையிட்டார். அப்படி முறையிடும் போது அவர் தனது மக்களுக்காகவே தான் போராடியதாக கூறினார், ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் அவர் வாத்த்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் மனித உரிமை என்று அவர்கள் குறிப்பிடுவது தனிமனித உரிமையையே ஒழிய ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினுடைய உரிமையை அல்ல.

ஆகவே தனி ஒரு மனிதராக பிரத்தியேகமாக துருக்கி என்ற நாட்டின் அதிகாரம் அவரின் உரிமையை மறுத்திருந்தால் மட்டுமேயொழிய அவரின் முறையீட்டை அவர்கள் குறைந்த பட்சம் செவிமடுத்திருப்பார்கள்.

மக்கள் கூடத்தின் கோரிக்கைகளை அரசியல் தீர்வு மூலமே அணுக முடியும் என்றது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் எல்லா நாடுகளும் நேட்டோவிலும் அங்கம் வகிக்கின்றன ஆகவே அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளும் ஐயோப்பிய யூனியன் வெளியுறவுக்கொள்கைகளும் சட்ட திட்டங்களும் கிட்டத்தட்ட ஓரே நேர் கோட்டில் பயணிப்பவை.

ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சியில் நூறாயிரத்திற்கு மேற்பட்ட குர்திஸ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டு அவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் தேச வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. இதானால் ஈராக் ல் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் மேற்கு நாடுகளுக்கு ஈராக்கிய குர்திஸ் மக்கள் உதவிகள் செய்தனர். அவர்களின் தனி நாட்டு. கோரிக்கையை நிறைவேற்ற செவிமடுப்பதாக சொல்லியே அவர்கள் உதவிகளை பெற்றுக்கொண்டனர், பின்னர் அது நடக்காமல் போனது.

பின்னர் சிரியாவில் ஓச்சலன் தலைமையில் வளர்த்து விடப்பட்ட குர்த்திஸ் ரோஜாவோ பெண்கள் இயக்க போராளிகளின் தேவை 2017 ல் சிரியாவில் ஐசிஸ் இயக்கத்தை அழிக்க அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரோஜோவோ இயக்கம் மேற்குலகத்திடம் நன்மதிப்பை பெற்றது.

உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குர்திஸ் போராட்ட இயக்கங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டிய தேவை மேற்குலகத்திற்கு வந்திருக்கிறது.

அதனால் குர்திஸ் இயக்கத்தை மீண்டும் ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் விழிப்படைய செய்ய மாஸா அமினியின் கொலையை பெண்ணியப்போராட்டமாகவும் குர்திஸ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டமாகவும் பெரிய அளவில் மாற்ற விளைகிறது.

ஆனால் இன்று உக்ரைன் போருக்கு துருக்கியும் ஈரானும் துணை போகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டையும் அமெரிக்கா வைக்கிறது.

நேட்டோவோடு துருக்கி இணைந்திருந்த போதிலும் நேட்டோவின் பரம எதிரியான ரஷ்யாவிடம் இருந்து S-300 என்ற கனரக ஆயுத்த்தை 2020 ல் கொள்வனவு செய்து பல நேட்டோ நாடுகளின் வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா இந்த செயலை பெரும் நம்பிக்கைத்துரோகம் என்றும் அதனது F-35 ஸ்ரெல்த் யுத்த விமானத்தை S-300 சுட்டு விழுத்த வல்லது என்று குற்றம் சாட்டியது, இதனைக்கண்டித்து பல பொருளாதார தடைகளை விதித்தது.

இதற்கு பதிலடியாக துருக்கிய அதிபர் எரொடகன் துருக்கியில் தளம் அமைத்திருக்கும் அமெரிக்க இராணுவம் ஆஜியன் கடலில் நீச்சல் கற்க வேண்டி வரும் என்று சூழுரைத்தார்.

இதனையடுத்து துருக்கி அதனது இரண்டாவது அணுவாயுதக்கொள்வனவான S-400 ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவுடன் ஈடுபட்டுவருகிறது.

துருக்கியின் அண்டை நாடான கிறீஸ் ல். உள்ள அமெரிக்காவின் இராணுவத்தளத்

தளமான அலெக்ஸ்ஸாண்டிரோபொலிஸ் என்ற தீவில் மிக துரிதமாக கனரக யுத்த ஆயுதங்களை அந்த துறைமுகத்தில் இருந்து கப்பலிலில் இறக்குவதை துருக்கி பதட்டத்தோடு கண்காணித்து வந்தது.

இதன் பின்னர் உக்ரைனில் ஓர் பாலம் உடைக்கப்பட்டதும் கடலுக்கடியில் இருந்த ரஷ்யாவின் Nord Stream எண்ணெய் கடத்தும் மிகப்பலம் வாய்ந்த குழாய்களும்்உடைக்கப்பட்டது யாவரும் செய்திகளில் அறிந்த ஓரு விடயம்.

துருக்கியும் அதனது பண்டைய ஓட்டோமன் ராஐ்யத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆஜியன் மற்றும் மத்திய தரைக்கடலில் செயலாற்றி வருகிறது. முதலாம் உலகப்போருக்கு முன்னர் துருக்கிக்குஆஜியன் அயோனியன் மற்றும் மத்தியதரைக்கடல் சொந்தமாக இருந்தது ஆனால் இன்று கிறீஸ் ற்கு சொந்தமாக இருக்கிறது கிறீஸ் ன் நேச் நாடாக அமெரிக்கா இருக்கிறது.

துருக்கி அதிபர் எரொடகன் சில வாரங்களுக்கு முன் அவரது உரையில் தாங்கள் நினைத்தால் கிறீக் ஐ ஓரே இரவில் முற்றுகையிடலாம் என்று சூழுரைத்தார்.

உக்கரைன் யுத்தத்தை சாக்காக வைத்து ரஷ்யாவின் எல்லைக்கோட்டில் அதனோடு சமாதானமாக இருந்த பின்லாந்து மற்றும் டென்மார்க் ஐ நேட்டோவில் சேர்த்ததில் இருந்து ரஷ்யா அதன் அதிகாரத்தை மேலும் இந்த பிராந்தியங்களில்் பலப்படுத்திக்கொண்டு வருகிறது.

ஆகவே இந்தப்பிராந்தியத்தில் துருக்கி மற்றும் ஈரானின் எதிரிகளாக தனிநாட்டுக்கனவுகளோடு உதிரிகளாக இருக்கும் பல மில்லியன் குர்த்திஸ் மக்களின் ஆதரவு மேற்குலகிற்கு தேவை, அவர்களை ஒன்று திரட்ட ஒரு பொது கொள்கை தேவை, அது இந்த்ப்பிராந்தத்தில் பெண்ணிய விடுதலையாகவுஉம் கூடவே குர்திஸ் இன விடுதலையாகவும் இருக்கலாம்.

அமெரிக்கா நேராக ஈரான் மற்றும் துருக்கியோடு போர் புரிவதை விட குர்திஸ் விடிதலைப்போராளிகளுக்குள் மீண்டும் தனிநாட்டுக்கனவை உசுப்பிவிடுவதை இலகுவானது. மாஸா அமினியின் கொலையை குர்திஸ்ரான் மக்களின் போராட்டமாகவும் ஈரான் அரசையே கவிழ்த்து விட வேண்டும் என்கிற பெண்ணிய போராட்டமாகவும் ஊக்குவித்து இந்த போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.