வரவு-செலவுத் திட்டம் அரசமைப்பின் ஊடாக வாக்களிப்பின்றி நிறைவேற்றம்!
Kumarathasan Karthigesu
பிரான்ஸில் அதிபர் மக்ரோனின் பெரும்பான்மை பலமற்ற புதிய அரசு நாடாளுமன்றத்தில் முதலாவது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குக் கடந்த ஒரு வாரகாலமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் கடைசி ஆயுதமாக அரசமைப்பின் 49.3 என்ற விசேட பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பை வலிந்து தவிர்த்து விட்டுத் திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்ஸின் அரசமைப்பின் 49 ஆவது ஷரத்தின் 3ஆவது பிரிவு, ஒரு சட்ட வரைவை மக்கள் ஆணை பெற்ற நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தவிர்த்துவிட்டு அரசு ஆணை மூலம் நிறைவேற்றுவதை அனுமதிக்கின்றது.
எனினும் அரசின் அத்தகைய ஒரு தீர்மானத்தை அது அறிவிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் செல்லுபடியற்றதாக்க முடியும். அவ்வாறு முயற்சிக்கின்ற எதிர்க்கட்சிகள் அதற்கு மன்றில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களது பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட வேண்டும்.
புதிய வரவு – செலவுத் திட்டத்தை வாக்களிப்பின்றி நிறைவேற்றிச் சட்டமாக்குவதற்கு அரசு 49.3 அரசமைப்பு அதிகார வழிமுறையைப் பின்பற்றப் போகிறது என்ற முடிவை பிரதமர் எலிசபெத் போர்ன் இன்று புதன்கிழமை மாலை முறைப்படி அறிவித்திருக்கிறார். நாட்டுக்கு ஒரு வரவு-செலவுத் திட்டம் அவசியம். அதனை உறுதி செய்வது எங்களது பொறுப்பு ஆகும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
பிரதமரின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. 49.3 வழிமுறைக்கு எதிராக தீவிர வலது சாரி மரின் லூ பெனின் கட்சி தனியாக நம்பிக்கை கோரும் பிரேரணை (no confidence motion) ஒன்றை முன்வைக்கவுள்ளது. அதேபோன்று இடதுசாரிகளது கூட்டணி சார்பிலும் ஒரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
கடந்த ஜூனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரோனின் ஆளும் கட்சிக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைக் கோட்டை விட்டது. தீவிர வலது சாரி களும் தீவிர இடது சாரிகள் தலைமையிலான இடதுசாரிகள் மற்றும் பசுமைக் கட்சிகளின் கூட்டணியும் நாடாளுமன்றில் அதிக இடங்களைக் கைப்பற்றின.
தற்சமயம் பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சிகள் வசம் உள்ள போதிலும் எதிரும் புதிருமான தீவிர வலதுசாரிகளும் இடதுசாரிகளும் அரசுக்கு எதிராக ஒருமித்து அணிதிரண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான உறுப்பினர் எண்ணிக்கை காணப்படவில்லை.
வரவு – செலவுத் திட்டம் அரசமைப்பு அதிகாரம் மூலம் கீழ்ச் சபையில் வாக்களிப்பு இன்றி நிறைவேற்றப்பட்டாலும் கூட அதன் மீதான விவாதாங்கள் வழமை போன்று நடைபெறும் என்று நிதி அமைச்சர் புருனோ லு மேயர் தெரிவித்திருக்கிறார்.