ஆக்கிரமித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்! புடின் பிரகடனம்-மக்கள் வெளியேற்றம்.

Kumarathasan Karthigesu

ரஷ்யா அண்மையில் தன்னோடு இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும் இராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

இன்று புதன்கிழமை நாட்டின் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் நடத்திய தொலைக்காட்சி உரையாடலின் போது அதிபர் புடின் இதனை அறிவித்துள்ளார். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷ்ஷியா,(Donetsk, Luhansk, Kherson, Zaporizhzhya)ஆகிய நான்கு பிராந்தியங்களிலுமே இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நான்கு பிராந்தியங்களையும் நேரடியாக மொஸ்கோவின் உத்தரவின் கீழ்

இயக்குவதற்காகப் பிரதமர் தலைமையில் இணைப்புச் சபை ஒன்று நிறுவப்பட்டிருப்பதாகவும் புடின் அறிவித்திருக்கிறார். முப்படைகள் மற்றும் பொலீஸாருடன் சிவில் அதிகாரிகள் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைத் தலைமையகங்கள் நான்கு பிராந்தியங்களினதும் ஆளுநர்களின் கீழ் இயங்கவுள்ளன.

கைப்பற்றிய இந்தப் பிராந்தியங்களை ரஷ்யா கடந்த மாதம் தன்னோடு இணைத்துக்கொண்ட போதிலும் அங்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கெர்சன் பிராந்தியத்தில் மிக முக்கியமான கெர்சன் நகரம் உக்ரைன் படைகளிடம் வீழ்வதைத் தடுப்பதற்காக சிவிலியன்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் பெருமெடுப்பில் நடைபெறுகின்றன.

இதேவேளை, ரஷ்யா கடந்த பத்து நாட்களாக உக்ரைனின் பல பகுதிகளிலும் மின் பரிமாற்ற மையங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து நூற்றுக்கணக்கான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. குளிர்காலம் தொடங்கியுள்ள வேளையில் மின் துண்டிக்கப்பட்டிருப்பது மக்களைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர்ந்தும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்று மாலை உக்ரைனின் வான் பாதுகாப்பு சாதனங்கள் ரஷ்யாவின் சில ஏவுகணைகளை வானில் தடுத்து வெடிக்கச் செய்தன என்று கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.