எரிபொருள் விலைகள் குறைப்பு !

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை திருத்தங்கள் இன்று திங்கட்கிழமை (17) இரவு 9 மணி முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி, 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாலும் ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 415 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் என்பவற்றின் விலை 510 ரூபாவாகக் காணப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய்யின் விலை 340 ரூபாவாகவும் , தொழிற்சாலை மண்ணெண்ணெய் விலை 464 ரூபாவாகவும் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தானம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்குறைப்பிற்கமைய பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.