எதிர்ப்பாளர்களை ஒடுக்க ‘PTA அவசியம்’
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், பயங்கரவாதச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், பயங்கரவாதச் சட்டத்தை நீக்கி, அதன் கீழ் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பை வழங்கத் தேவையில்லை” என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 தமிழ் கைதிகள் தம் விடுதலைக்காக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் 10 நாட்களைக் கடந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், பயங்கரவாதச் சட்டத்தை இல்லாதொழிக்கக் கோரி இலங்கை தமிழரசு கட்சி இளைஞர் முன்னணி வடக்கில் காங்கேசன்துறையில் இருந்து தெற்கில் ஹம்பாந்தோட்டைக்கு கையொப்பம் பெறும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இதுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறைகளில் உள்ள பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது. பயங்கரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்களை ஒடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் இருக்க வேண்டும்.”
`இந்த சட்டமூலத்தை இல்லாதொழிக்க வடக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்துப் போராட்டத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். ஜெனீவா மாநாட்டை அடிப்படையாக வைத்து நாடு முழுவதும் செல்ல ஆரம்பித்துள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.”
காங்கேசன்துறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை முன்னெடுக்கப்படும் பயங்கரவத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப்பெறும் நடவடிக்கையின் ஆறாவது நாள் முல்லைத்தீவு மல்லாவியில் வார இறுதியில் இடம்பெற்றது.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றுமொரு ஏமாற்று வேலை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட போதும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதுவும் செய்யப்படவில்லை. தேசிய கைதிகள் தினத்திற்காக 417 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், ஆனால் ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை. ஜனாதிபதியின் வாக்குறுதியினால் நாற்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்தனர், அதுவும் ஏமாற்று வேலையே.” என, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 6 பேரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.