சாம் பிரதீபனிடம் பாலசந்தரின் தாக்கம் நிறைய இருக்கின்றது!

மெய்வெளி தமிழ் பிரித்தானிய நாடக இயக்கத்தின் நாடக விழா

“ நமக்கென்றோர் நலியாக் கலை உடையோம்” என்ற முழக்கத்துடன் அமைப்பாளர்களின் வேண்டுகோளைத் தட்டாத ரசிகர்களால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக நான்கு நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன.

உண்மையில் இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் போற்றி வளர்ப்பதில் தணியாத தாகத்துடன் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர் என்பதற்கு கைதட்டி ரசித்து வரவேற்ற ரசிகப் பெருமக்களே சாட்சி.

குறிப்பாக நாடகம் என்ற வடிவத்தை பட்டி, தொட்டி எங்கும் சென்று கற்று பரப்பி தமிழர் வாழ்வோடு இணைத்து வளர்த்து இன்றும் மேடையேற்றினால்
கொண்டாடப்படக் கூடிய “ இருட்டினில்்குருட்டாட்டம்” “பொறுத்தது போதும்” போன்ற நாடகங்களைத் தந்த தாசீசியஸ் மாஸ்டர் அவர்களைப் பாராட்டி நித்தி மாஸ்டர் பேசியபோதும் அவருக்கு “ கண்ணுளர் கோன்” பட்டம் வழங்கப்பட்ட ஏற்புரையின் போதும் சாகாவரம் பெற்ற கலைஞரது அநுபவங்களை ஊன்றிக் கவனித்துக் கேட்ட பார்வையாளர்களின் கலை ஈடுபாடு பாராட்டத் தகுந்தது.

முதலில் மேடையேற்றப்பட்ட நாடகம் கனவு தேசம் அல்லது வெளிநாட்டு மோகம் என்று கொள்ளலாம்.

கனவு தேச படகோடும் அணிக்கும் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் , படியுங்கோ மக்காள்… படித்தால் உயர்வு அணிக்கும் நடக்கும் கருத்து மோதலாக பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றது.
இடையில் கனவு தேசங்களின் முன் வந்த மூத்த குடி ஒன்று வந்து நான் பட்ட துன்பம் நீவிர் பெற வேண்டாம். அங்கு ஒண்டும் இல்லை என்று உண்மை பேசுகின்றார். ஆனால் புளுகைத் தொழிலாக கொண்ட மேனா மினுக்கிக்
கூட்டம் ஒன்று அதற்குள் வந்து தங்கள் கடையைப் பரப்புகின்றது. உண்மைக்கும்
பொய்மைக்கும் ஆன மோதல் தொடர்ந்து
போலி நம்பிக்கை அல்லது கனவே வெற்றி பெறுகின்றது.

நாடகத்தின் பிரதி ஈழம் என்ற எல்லைக்கு அப்பால் பிழைப்பு என்ற வாழ்க்கைக் கனவுக்கு அப்பால் எதனையும் தொட முயற்சிக்கவே இல்லை.
முதலாவது முக்கியமான கேள்வியாக
உலகப் பந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த படையெடுப்பு நடக்கின்றது. அது ஏன்? என்ற தேடலை நாடகப் பிரதி நைச்சியமாக கடந்து செல்கின்றது. காட்சிப் படுத்தலில் அல்லது அநுபவங்களை வந்து சொல்பவர்களிடமிருந்தாவது இடப்பெயர்வு பூகோள அளவில் இருக்கின்றது என்ற விடயம் வெளிவரவில்லை. அதுவிதம் வரும் பட்சத்தில் தான் ஒரு முழுமையான முற்போக்கான சித்திரம் கிடைக்கும்
ஆவலுடன் ஆர்ப்பரிக்கும் ரசிகனாக நானும் அவையும் இதைத் தான் எதிர்பார்க்கின்றோம்.

இரண்டாஙதாக மேடை ஏற்றப்பட்ட பெண் அடிமை நாடகம் பிரதியில் நிறைய ஓட்டைகள் கொண்டது. நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற விஜய் சேதுபதி போல ரசிகர்களை ஏங்க வைத்தது. எங்களூர் பெண்கள் எதனைப் படித்தால் குடும்ப கௌரவம் தழைக்கும் என்ற கொடுமை, கௌரவ அப்பாவாக தோன்றி சாம் பிரதீபன் கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்துகின்றார். கதைக்களம் 1960-1970 யாழ்ப்பாணம் என்றொரு தட்டி வைத்திருந்தால் சிலவேளை நிம்மதி அடைந்திருக்கலாம்.

அடுப்பூதும் பொண்கள் நெருப்பூதி அங்கயற் கண்ணிகளான காலம் தென்கிழக்கு ஆசியாவிலேயே ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கு மட்டும் தான்… அந்தக் காலத்தையும் அந்தக் காலத்தின் சாதனைகளையும் அந்தச் சாதனைகள் பற்றி கரிகாலர் சொன்ன
“ நான் இவையளைச் சேர்க்க பெரிதும் தயங்கிய ஒரு ஆள்… ஆனால் சேர்த்த பிறகுதான் எனது எண்ணம் தவறு. ஆண்களை விட ஆற்றலும், வீரமும், விடுதலையும் கொண்டவர்கள்” என்ற சுயவிமர்சனத்தை விட்டுவிட்டு புதுமைப் பெண்ணை உருவகிக்க “பார்த்துக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேண்டும்” என்று “கொக்கோகம்” தந்த எம் பிராந்திய வல்லுனர்களை இழிவு செய்த பாரதியை அழைப்பது அநியாயத்திலும் அநியாயம்.

மூன்றாவது நாடகம் ஒரு தனி மனிதனின் நாடக அநுபவம் மற்றும் பார்வையாளரைக் கட்டிப் போடும் விந்தை போன்றவற்றின் கூட்டுக் கலவை. ஆனால் ஆமியிடம் அடிவாங்கி அகதியான பிரதீபன் ஏன்? ஆமி வந்து கதவைத் தட்டிக் கதறக்,கதற உதை கொடுத்தான் என்பதை அப்படியே விட்டு விடுகின்றார். பின்பு அவர் தும்படிச்ச தேசங்களிலும் கோவில் வாசலில் அல்லது பொங்கல் விழா வாசலில் “ தம்பி வந்தனீங்கள் விடுதலைக்காக … ஒரு “பொதுமை”“ களத்தில்” “விடுதலைப்புலிகள்” “ ஈழம் செய்திகள்” அல்லது லடீஸ் வீரமணியின்ரை விடுதலை வில்லுப்பாட்டு, கே எஸ் ராஜா வைச்ச விடுதலை நிதி திரட்டும் கச்சேரி கசெட்டுக்கள் வாங்கிட்டுப் போங்கோ! அஞ்சு டொலர்தான்… அஞ்சு பவுண்ஸ்தான் எண்ட குரல்கள் கேட்கவில்லை என்று நாடக பிரதி செய்வது அபத்தம். அவ்வாறு செய்வது அவரது மானசீக குருவின் வார்த்தைகளான “ கலை மக்களுக்குச் சொந்தம் மற்றும் கலை காலத்தின் கண்ணாடி” போன்ற பிரகடனங்களுக்கு எதுர்நிலை.

கடைசி நாடகம் கண்ணுக்கும் , காதுக்கும் குளிர்ச்சி பார்வையாளரோடு ஒன்றிப் போக ஒரே ஒரு ஈழமகள் போனஸாக ஈழக் காடு. மற்றபடி கொஞ்ச காலத்தில் AI பார்த்துக் கொள்ளும்.

இரண்டாம் தலைமுறை புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் எப்படி நம் நலியாக் கலையை எடுத்துச் சென்று வளர்ப்பது என்பதற்கு நல்ல உதாரணம் பிரெஞ்சுத் தமிழன் எடுத்த “ சின்ன யாழ்ப்பாணம்” ( Little Jaffna) இப்போது அமேசான் prime இல் உள்ளது.

தமிழக திரைப்பட இயக்குநர் பாலசந்தர் ஒரு முறை “ தமிழ் இரசிகர்களின் ரசனை
அதலபாதாளத்தில் இருக்கின்றது. அதனால் தான் மோசமான படங்களை எடுக்குன்றேன்… “ என்று.

சாம் பிரதீபனிடம் பாலசந்தரின் தாக்கம்
நிறைய இருக்கின்றது. அவரும் பாலசந்தர் சொன்னதை பத்து வருடங்களின் பின்பாக மீள் ஒலிபரப்பு செய்யக் கூடாதிருக்க அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்த்த
ஆண்டவரை இறைஞ்சுகின்றேன்.