அரசாங்கத்தின் ஊழல் மற்றும் இயலாமையின் சுமையை மக்கள் மீது சுமத்தக் கூடாது என கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில காட்டம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

“மோசடியான திசைகாட்டி அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான மாபெரும் மக்களின் குரல்” எனும் தலைப்பில் கூட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், இயற்கை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 550 மில்லியன் டொலர் என்ற பெருந்தொகை செலவிடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கையிருப்பு சரிந்துள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வாகன இறக்குமதியே இதற்குக் காரணம் எனக்கூறி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த ஜனாதிபதி முயல்வதாகவும், இது ஜனாதிபதியின் ‘பொய் பட்டியலில்’ சேர்ந்துள்ள புதிய பொய் என்றும் உதய கம்மன்பில சாடினார்.
தணிக்கையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளபடி, இலங்கைக்குத் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாகவே நுரைச்சோலை ‘லக்விஜய’ நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் உண்மையான மின் உற்பத்தித் திறன் 20% முதல் 25% வரை வீழ்ச்சியடைந்தது என்றும், இந்த மின் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக, அதிக செலவுடைய டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் டீசல் இறக்குமதிச் செலவு அதிகரித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சர்வதேச மாநாடொன்றில் HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்ட தரவுகளின்படி, உலகிலேயே எரிபொருளுக்காக அதிக விலை கொடுத்துள்ள நாடு இலங்கைதான் எனக் குறிப்பிட்ட அவர், விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் அபாண்டமான முறையில் அதிக லாபத்தை வாரி வழங்கியதே இதற்குக் காரணம் என்றும், இது விநியோகஸ்தர்கள் மீதான பாசத்திலா அல்லது யுத்தத்தைக் காட்டி மக்களைக் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்திட்டமா என்ற கேள்வி எழுகிறது என்றும் வினவினார்.
அரசாங்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல், மோசடி மற்றும் இயலாமையின் சுமையை மக்கள் மீது சுமத்த ஜனாதிபதி விரும்பவில்லை என்றால், திறைசேரிக்கு பதிலாக அந்தப் செலவுகளை ‘பெலவத்தை கணக்கிலிருந்து’ ஈடுசெய்ய வேண்டும் என அவர் சவால் விடுத்தார்.
தற்போது நாடு முழுவதும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வாகனங்கள் மீது மரங்கள் முறிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ‘மக்களின் குரல்’ அமைப்பின் சார்பில் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் முதன்மைச் செயலாளர் ரில்வின் சில்வா நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, “நீதிபதிகள் தமக்குத் தேவையானவாறே தீர்ப்புகளை எழுதுகிறார்கள்” என்று பகிரங்கமாக நாட்டுக்குச் செய்தி கூறி வருவதாகக் குற்றம் சாட்டிய உதய கம்மன்பில, நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியும், அவருக்கு மேல் இருக்கும் ‘பூஜ்ய குடிமகனான’ ரில்வின் சில்வாவும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் பகிரங்கமாகத் தலையிடுவதன் மூலம் நாட்டின் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலந்து, பொதுமக்கள் அநாதரவான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என விசனம் தெரிவித்தார்.
மேலும், இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீதித்துறைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் குறித்து, அனைத்து முக்கிய வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ‘மக்களின் குரல்’ அமைப்பின் ஊடாகத் தகுந்த ஆதாரங்களுடன் முறையான விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

