எரிசக்தி நெருக்கடி: நீச்சல் தடாகங்கள் மூடப்படுகின்றன.

நீச்சல் பயிற்சிகள் பாதிப்பு.

பிரான்ஸின் பல இடங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பொது நீச்சல் தடாகங்கள் (piscines publiques) மூடப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Vert Marine group என்ற நிறுவனத்தினால் இயக்கப்படுகின்ற நீச்சல் தடாகங்களே திங்கட்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட உடனடி விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

நீச்சல் தடாகங்களின் எரிசக்திக் கட்டணங்கள் 15 மில்லியனில் இருந்து 100 மில்லியன்களாக அதிகரித்துள்ளது என்று Vert Marine company நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனாலேயே அவற்றை மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டது என்று அது விளக்கமளித்துள்ளது.

பிரான்ஸின் பல நகரங்களில் உள்ளூர் நகர நிர்வாகங்களுடன் கலந்தாலோசிக்காமல் நீச்சல் தடாகங்களைத் திடீரென மூடிய செயலுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பிரான்ஸ் நீச்சல் சம்மேளனம்(la Fédération française de natation) மூடப்பட்ட முப்பது நீச்சல் தடாகங்களையும் உடனடியாகத் திறக்குமாறு கேட்டிருக்கிறது. நீச்சல் பயிற்சி பெறுகின்ற சிறுவர்களும் வளர்ந்தோரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது. Vert Marine company பிரான்ஸில் 90 க்கு மேற்பட்ட பொது நீய்ச்சல் தடாகங்களை இயக்கிவருகிறது.