நெருக்கடி ஏற்பட்டால் ஜேர்மனிக்கு எரிவாயு பிரான்ஸ் வழங்கும்.

Kumarathasan Karthigesu

அதிபர் சோல்ஸுடன் மக்ரோன் வீடியோ வழியே உரையாடல்.

பிரான்ஸ் வரவிருக்கும் குளிர் காலப்பகுதியில் தேவை ஏற்பட்டால் எரிவாயுவை ஜேர்மனிக்கு வழங்கத் தயாராக உள்ளது . ஜேர்மனியின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுவதன் மூலம் நெருக்கடி ஏற்பட்டால் அங்கிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜரோப்பா எதிர்கொள்கின்ற எரிசக்தி நெருக்கடி தொடர்பாக அதிபர் மக்ரோன் இன்று ஜேர்மனிய சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன் காணொலி வழியே நடத்திய பேச்சுக்களை அடுத்து இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தமக்குள் ஐக்கியப்பட்டு இவ்வாறு பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் எரிசக்தி நுகர்வைச் சிக்கனமாக்குமாறு அவர் நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.

ரஷ்யாவின் எரிவாயுத் துண்டிப்பை அடுத்து அதி உச்ச பாவனைக் காலத்தில் எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜேர்மனியும் பிரான்ஸும் அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

பிரான்ஸ் வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளவிருக்கின்ற எரிவாயுவில் ஒரு பகுதியைத் தேவைப்பட்டால் ஜேர்மனிக்கு வழங்கும் என்று மக்ரோன் கூறியிருக்கிறார். அதேபோன்று பிரான்ஸில் மின் வெட்டு நெருக்கடி உருவானால் அதைச் சமாளிப்பதற்கு ஜேர்மனியிடம் மின் உதவியைப் பெற்றுக் கொள்ளும்.

குளிர்காலப் பகுதிக்குத் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பைத் தாங்கள் உறுதி செய்துள்ளனர் என்று பிரான்ஸின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூடப்பட்டிருக்கின்ற அணு உலைகளை மீள இயக்குவதற்கான திட்டங்களையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

வரும் மாதங்களில் எரிசக்திப் பாவனையை பத்து சத வீதத்தால் குறைப்பதன் மூலம் மின் வெட்டையும் எரிவாயுப் பங்கீட்டு முறையையும் தவிர்க்க முடியும். அந்த இலக்கை எட்டுவதற்காக குளிரூட்டுவதையும் வெப்பமூட்டுவதையும்  இயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள் – என்று மக்ரோன் நாட்டு மக்களைக் கேட்டிருக்கிறார்.