பிரிட்டிஷ் அமைச்சரவையில் ரணில்.

Kumarathasan Karthigesu

பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்த்தன (Ranil Jayawardena) அந்நாட்டின் கபினற் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 36 வயதான ரணில் ஜெயவர்த்தனவுக்கு பிரதமர் லிஸ் ட்ரஸின் அமைச்சரவையில் சுற்றுச் சூழல், உணவு மற்றும் கிராமப் புற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.அவர் இதற்கு முன்னர் சர்வதேச வர்த்தகத்துக்கான கீழ் நிலை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்தத் தடவை அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் வெளிநாட்டுப் பூர்வீகம் கொண்ட அரசியல் பிரமுகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயவர்த்தனவும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அவர் இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தந்தைக்கும் இந்திய வம்சாவளிப் பெண்ணாகிய தாய்க்கும் மகனாக 1986 இல் லண்டனில் பிறந்தவர்.

2015 இல் North East Hampshire தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்தவர். லண்டன் பொருளியல், அரசியல் விஞ்ஞானக் கல்லூரியில்( London School of Economics and Political Science) கல்வி பயின்ற ரணில் ஜெயவர்த்தன, முன்னர் லொயிட்ஸ் (Lloyds) வங்கிக் குழுமத்தில் பணியாற்றியிருந்தார்.