கைதுகளின் பின்னணியில் மொட்டுக் கட்சி, ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
- வீடியோ இணைப்பு -
இலங்கையில் கடந்த ஜுலை மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் சேதமாக்கப்பட்ட விடயத்துடன் தொடர்புடைய கைதுகளின்போது பொலிஸார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதாக தென்னிலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சியின் அரசியல்வாதிகள் வழங்கும் பெயர்ப்பட்டியல்களுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அதற்கு ஆதாரமாக 2021ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 182 பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பரிந்துரை செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளே எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்குத் தெரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைகத்தமை தொடர்பில் இன்று கைதுகள் இடம்பெறுகின்றன. இந்த கைதுகள் மொட்டுக் கட்சியின் முன்னாள், இன்னாள் பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் வழங்கும் பெயர் பட்டியலுக்கு அமையவே இடம்பெறுகின்றது. இது மிகவும் பாரதூரமான விடயம். 2021ஆம் ஆண்டு பொலிஸுக்கு 184 பேர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் 182 பேர் மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார். ஆகவே சில பொலிஸ் நிலையங்களில் மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்டவர்களே பணியாற்றுகின்றனர். ஆகவே மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. ஆகவே கைதுக்கான சாட்சியாக மொட்டுக் கட்சியின் பெயர்ப் பட்டியலே காணப்படுகின்றது. இது மிகவும் பாரதூரமான அடக்குமுறை இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த தொடர் அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அடக்குமுறைக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.