புதிய பிரதமரை அறிவிக்கத் தயாராகிறது ஐக்கிய ராஜ்ஜியம்.
Kumarathasan Karthigesu
பதவி விலகிய பொறிஸ் ஜோன்சனின் இடத்துக்கு பழைமைவாதக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த பல வாரங்களாக நடைபெற்று வந்த தலைவர் தெரிவுக்கான வாக்களிப்புகள் யாவும் முடிவுக்கு வந்துள்ளன.
முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்(Rishi Sunak) வெளியுறவுத்துறைச் செயலர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) இருவரில் யார் வெற்றியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். பிரிட்டிஷ் பழைமை வாதிகள் பெண் வேட்பாளரான லிஸ் ட்ரஸ் அம்மையாருக்கே தங்கள் பேராதரவை வழங்கிக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்வர் என்பதைக் கணிப்புகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தன.
ஆசிய வம்சாவளியில் இந்தியப் பின்னணி கொண்ட ரிஷி சுனாக், ஆரம்பத்தில் கட்சிக்குள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த போதிலும் பிந்திய நாட்களில் அவரது நிலை இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது.
புதிய கட்சித் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்படுவார். கடந்த ஜூலை மாதம் பதவி விலகிய பொறிஸ் ஜோன்சன் செவ்வாய்க் கிழமை மகாராணி எலிசபெத்தைச் சந்தித்துத் தனது பதவிவிலகலை மரபு முறைப்படி அறிவிப்பார். அதன் பின்னர் கட்சியின் புதிய தலைவரை மகாராணி நாட்டின் அடுத்த பிரதமராக நியமிப்பார்.
இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை ரிஷி சுனாக், ரிஸ் ட்ரஸ் இருவரும் பிபிசி தொலைக்காட்சிச் செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
வரலாறு காணாத வாழ்க்கைச் செலவுச் சுமையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் உச்சத்துக்கு எகிறவுள்ள எரிசக்திக் கட்டணங்கள் உட்பட மக்களது அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளுக்கான உடனடித் தீர்வுத் திட்டங்கள் என்ன என்பதை புதிய பிரதமர் தான் பதவியேற்ற கையோடு நாட்டுக்கு அறிவிக்கவேண்டி இருக்கும்.
நம்பர் 10, டவுணிங் வீதி பிரதமர் இல்லத்தில் பதவியில் அமர நீங்கள் எதற்காக விரும்புகிறீர்கள்? இவ்வாறு ஒரு கேள்விக்கும் இரண்டு வேட்பாளர்களும் இன்றைய தொலைக்காட்சி விவாதத்தில் பதிலளிக்கவேண்டி இருக்கும்.