பிரித்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா நிறைவேற்றம்.
பிரித்தானியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா, நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது. பிரித்தானிய பிரதமர்கள் சிலரும், உள்துறைச் செயலர்கள் சிலரும், புலம்பெயர்தலை எப்படியாவது கட்டுப்படுத்தியே தீருவது என கங்கணங்கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளில் ஒரு நடவடிக்கையாக, சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
ஆனால், புலம்பெயர்தல் ஆதரவு தொண்டு நிறுவனங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில், நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று, அந்த மசோதா முறைப்படி மன்னரின் ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் முதல் குழு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக உள்துறை அலுவலக வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள். ஜூலை மாதம் அவர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.