ஈழத்துத் தமிழுக்கு தொண்டாற்றிய பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்கள் காலமானார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்கள், 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். தமிழ்ப் புலமையாளரான இவர், முரசொலி பத்திரிகையின் வாரப் பதிப்பு ஆசிரியராகவும் சிறிது காலம் கடமையாற்றியிருந்ததோடு பல்வேறு தளங்களிலும் தமிழ் மற்றும் இந்து சமயம்சார் பல்வேறு முயற்சிகளிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தார்.
நன்னூல் உட்பட பல பண்டைத் தமிழ் இலக்கிய – இலக்கண நூல்களைக் கற்றுத் தேர்ந்து அதனை பலருக்கும் சொல்லிக்கொடுத்தும் வந்த அமரர், விஞ்ஞான அறிவையும் மேம்படுத்திக்கொண்டு, ‘மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாயும் இலத்திரன்’ என்று, நாம் சாதாரணமாக ‘இடி விழுவதாக’ கூறும் விடயத்தை விஞ்ஞான ரீதியாக விளக்கி, உதயன் சஞ்சீவி பத்திரிகையில் அவர் எழுதி கட்டுரையும் பலராலும் நினைவு கொள்ளப்படுவதுண்டு .இவர் பன்னிரு திருமுறை முழுவதையும், 1254 பதிகங்கள் 18, 268 பாடல்கள், கோயில் வரலாறு, அருளாளர் வரலாறு, ஆசியுரைகள் என அச்சுப் பதிப்புக்களில் மெய்ப்புப் பார்த்தவர்.
தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் தவத்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமச்சாரியாரின் ஆலோசகராக அக்காலங்களில் பணிபுரிந்தார். தமிழில் கற்றுத் துறை போதிய புலமையாளர். யாப்பு இலக்கணம் கைவரப் பெற்றவர்.வடமொழியை நன்கு கற்றறிந்தவர். ஆங்கில மொழி ஆசிரியராக இலங்கையில் பல பாடசாலைகளில் பணிபுரிந்த ஆங்கிலத்தில் வித்தகர். மரபுவழித் தமிழறிஞரான உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்களின் இழப்பு ஈழத்மிழ் உலகிற்கு பெரும் வெற்றிடத்தை தோற்றிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தொண்டாற்றிய பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்களுக்கு மெய்வெளி அஞ்சலியை செலுத்தி நிற்கின்றது