உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது -பிரதமர் மோடி

உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று தேர்தல் முடிந்தது.

அதனை தொடர்ந்து மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக – காங்கிரஸ் நேரடியாக களமிறங்கும் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரங்கள் வெகு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்று கிழமை அன்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொள்கையில், நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்றும், மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை காங்கிரஸ் கட்சி கணக்கு எடுத்து, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள் என்றும், பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கிட்டு காங்கிரஸ் பிரித்து கொடுக்க முயல்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி மதரீதியில் மக்களை பிரிக்க முயற்சி செய்கிறார் என்றும், நாட்டின் பிரதமர் இவ்வாறு பேச கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நான் மக்கள் முன் சில உண்மைகளை கூறினேன். அதனால், காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A  கூட்டணி மொத்தமும் பயத்தில் மூழ்கியுள்ளது.   மக்கள் சம்பாதித்த சொத்துக்களை அபகரித்து அவர்களின் சிறப்பு மக்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணிகளின் அரசியலை நான் அம்பலப்படுத்தியதால், அவர்கள் கோபமடைந்து, என் மீது தவறான விமர்சனங்களை முன்வக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். நீங்கள் உருவாக்கிய கொள்கையை நீங்களே ஏற்க பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அதன் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.