இல்-து-பிரான்ஸில் புதன், வியாழன் பனிப் பொழிவு
வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு
வரைபடம் :Météo France—
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் வடக்கு மாவட்டங்களில் இன்றிரவு முதல் அடுத்த ஓரிரு தினங்களுக்குக் கணிசமான பனிப் பொழிவு மற்றும் உறைபனிக் குளிர் காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
பாரிஸ் பிராந்தியத்தில் இன்றிரவு முதல் வியாழக்கிழமை வரை இரண்டு முதல் ஐந்து சென்ரிமீற்றர்கள் பனிப்பொழிவு ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. இதனால் கடந்த 8 ஆம் 9ஆம் திகதிகளில் ஏற்பட்டது போன்று வீதிகளை உறைபனி மூடிப் போக்குவரத்து நெருக்கடிகள் உருவாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பனி மற்றும் உறை பனிக் கால நெருக்கடித் திட்டத்தின் (plan neige et verglas) மூன்றாவது கட்டம் இன்று செவ்வாய்க் கிழமை இரவு பத்து மணியில் இருந்து புதன்கிழமை காலை ஆறு மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று பாரிஸ் பிராந்தியப் பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி 7.5 தொன்னுக்கு அதிகமான எடையுடைய பார ஊர்திகள் செல்வது தடை செய்யப்படுகிறது. வீதிகளில் வாகன வேகம் மணிக்கு 20 கிலோ மீற்றர்கள் வரை குறைக்கப்படலாம்.
அத்திலாந்திக் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள ஐரீன்(Irene) எனப் பெயரிடப்பட்ட காற்றழுத்தம் காரணமாக மென்மையான ஈரப்பதம் மிகுந்த காற்று நாட்டுக்கு மேலாக வீசவுள்ளது. அது வடக்கே இருந்து வருகின்ற குளிர் காற்றைச் சந்திக்கும் போது உறைபனி மழையாக மாற வாய்ப்புள்ளது. இதனால் செவ்வாய்க் கிழமை முதல் வியாழன் வரை நாட்டின் பெரும் பாகத்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவும். உள்ளூர் மட்டத்தில் 20 சென்ரிமீற்றர்கள் வரை பனிப்பொழிவு காணப்படலாம் என்று “மெத்தியோ பிரான்ஸ்” (Météo France) தெரிவித்துள்ளது.
Normandie, Île-de-France, Bourgogne உட்பட வடக்குப் பகுதியில் 36 மாவட்டங்களில் செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.